வாழ்வியல்

குட்டிக்கரணம் அடிக்கும் புதிய ரோபோ சிறுத்தை!

மேலிருந்து துாக்கிப் போட்டால், தரையில் பட்டுத் தடுமாறாமல் நிற்கிறது. எட்டி உதைத்தால், கீழே விழாமல் சுதாரித்துக் கொள்கிறது. யாராவது மல்லாந்து விழ வைத்தால், நான்கு கால்களால் பின்னோக்கி தரையை உந்தி, லாவகமாக எழுந்துக் கொள்கிறது.

எல்லாவற்றையும் விட, விசுக்கென்று பின்னோக்கி பல்டி அடித்து, சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பிக்கிறது. இதையெல்லாம் செய்வது, அமெரிக்காவிலுள்ள, எம்.ஐ.டி.,யின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, ‘சீட்டா’ மினி ரோபோ தான்.

ஏற்கனவே பெரிய அளவில், 41 கிலோ எடையில், சீட்டா ரோபோவை உருவாக்கி அசத்திய, எம்.ஐ.டி., விஞ்ஞானிகள், இப்போது, வெறும், 9 கிலோ மட்டுமே உள்ள மினி ரோபோவை உருவாக்கியுள்ளனர். உருவம் சிறியது என்றாலும், பெரிய சீட்டா ரோபோவால் முடியாத, பல வேலைகளை செய்கிறது மினி.

வினாடிக்கு, 2.45 மீட்டர் வேகத்தில் மினி ரோபோவால் ஓட முடியும். வேகமாக நாலுகால் பாய்ச்சலில் ஓடும்போதே வேகத்தை குறைத்து நடக்கவும், விருட்டென்று அசல் சிறுத்தை போல வேகமெடுக்கவும் முடியும்.

இத்தனைக்கும் இந்த ரோபோவுக்கு இன்னும் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதன் இயக்கத்திற்கு, பலவகை உணரிகள் உதவுகின்றன. மேலும் அது செல்லும் திசை, வேகம் போன்றவற்றை தொலைவியக்க முறையில், அதன் படைப்பாளிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

உலோக சிறுத்தையை உருவாக்கியதே சாதனை என்றால், அது ஏறக்குறைய மிருகத்தின் உடல் மொழியை வெளிப்படுத்துவதற்கு, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை எழுதியதும் பெரிய சாதனை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *