புதுடெல்லி, ஏப்.4-
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
டெல்லி சென்றிருந்தபோது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறதே?
பதில்:- நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் இருந்து வேறுபட்டது. இரண்டையும் ஒன்றாக கருதக்கூடாது. அப்படி நினைக்கவும் முடியாது. சட்டசபை தேர்தல்களில், அம்மாநிலத்தின் அரசியல் பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்தும். நாடாளுமன்ற தேர்தல், யார் பிரதமராக வரவேண்டும் என்ற அடிப்படையில் நடக்கும். எனவே, இரண்டையும் முடிச்சு போட்டு கணிப்பது சரியல்ல.
மேலும், 5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் வெற்றி பெற்றதாக கூறுவது தவறு. உத்தரபிரதேசத்தில், முன்பை விட குறைவான இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அதன் துணை முதலமைச்சர் உள்பட 10 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இது மக்களின் அதிருப்தியை உணர்த்துகிறது.
உத்தரகாண்டில், பாரதீய ஜனதா முதலமைச்சரே தோற்றுள்ளார். கோவா மாநிலத்தில் முக்கிய தலைவர்கள் வெற்றி பெறவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் 2 இடங்களில்தான் பாரதீய ஜனதா வென்றுள்ளது.
உண்மையான களநிலவரத்தை எடுத்துக்கொண்டால், 5 மாநில தேர்தல், பாரதீய ஜனதாவுக்கு எதிர்மறையாகவே அமைந்துள்ளது.
கேள்வி:- தமிழ்நாட்டில் 3-வது சக்தியாக உருவெடுத்துள்ளதாக பாரதீய ஜனதா கூறுகிறதே?
பதில்:- தேர்வில் ஒரு மாணவன் 90 மதிப்பெண் எடுக்கிறான். 2-வது மாணவன் 50 மதிப்பெண் எடுக்கிறான். மற்றொரு மாணவன் 10 மதிப்பெண் எடுக்கிறான். அதற்காக 10 மதிப்பெண் எடுத்து, 3-வது இடம் பிடித்த மாணவனை பாராட்டுவீர்களா?
கேள்வி:- உங்கள் துபாய் பயணத்தை பாரதீய ஜனதாவும், அண்ணா தி.மு.க.வும் விமர்சித்தது பற்றி?
பதில்:- அந்த கட்சிகள் எங்களை விமர்சிப்பது, துபாய் பயணத்தின் மாபெரும் வெற்றிக்கு அறிகுறி. இவ்வளவு குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு வெற்றி பெறுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது துபாய் பயணத்தில் ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனால் 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
துபாய், அபுதாபிக்கு சென்று, முக்கியமான மந்திரிகள், அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை சந்தித்தேன். இந்த பயணம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும். மற்றபடி, அவர்களது விமர்சனம் குறித்து நான் கவலைப்படவில்லை.
கேள்வி:- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, பெட்ரோலிய பொருட்களுக்கு வரிகுறைப்பு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நிர்வாகமும், நிதி மேலாண்மையும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. அந்த சூழ்நிலையில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.
கடந்த ஆட்சியையே குறை சொல்லிக்கொண்டிருக்காமல், துடிப்பான நடவடிக்கைகளை எடுத்து, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். தேவையற்ற செலவுகளை குறைத்துள்ளோம்.
பற்றாக்குறை இடைவெளியை குறைத்துள்ளோம். வருவாயை பன்மடங்கு பெருக்கி உள்ளோம். ஏராளமான புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். புதிய ஏற்றுமதி கொள்கை நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. அரசு பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டது. கொரோனா நிவாரணமாக, தலா ரூ.4 ஆயிரம் வழங்கினோம். ரேஷன் கார்டுதாரர்களுக்கு 13 மளிகை பொருட்களை இலவசமாக வழங்கினோம். பொங்கல் பரிசாக 22 பொருட்களை கொடுத்தோம்.
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதித்தோம். 14 லட்சம் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடிவரை கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. வீடு தேடி மருத்துவம், கல்வி போன்ற புதிய திட்டங்களை தொடங்கி உள்ளோம்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதற்கு தகுதியான பயனாளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
நாங்கள் சவால்களை பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல், எதிர்கால திட்டமிடல் நோக்கி நடைபோட்டு வருகிறோம். தமிழ்நாடு இழந்த பெருமையை நிச்சயமாக விரைவில் மீட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.