தமிழக பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு –
சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
ரூ.17,500 கோடியில் கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம்
சென்னை, மார்ச் 20–
குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15–ந் தேதி முதல் வழங்கப்படும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என்றும், இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கோவையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. 2023–24–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.
பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றார்கள்.
சென்னை நகருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
400 கோவில்கள் இந்த ஆண்டு குடமுழுக்கு செய்யப்படும். 2 ஆயிரம் கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம், 1000 புதிய பஸ்கள் கொள்முதல் என ஏராளமான புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டார்.
2–ம் கட்ட கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். சென்னை தீவுத் திடலில் திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.