சேலம், ஆக. 4–
சேலம் போடிநாயக்கன்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டி அடுத்துள்ள மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35). இவரது மனைவி சீதா (வயது 32). இவர்களுக்கு லோக பிரியா (14 வயது) என்ற மகளும், கௌதம் (11 வயது) என்ற மகனும் உள்ளனர். லோக பிரியா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கௌதம் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன், மனைவி தற்கொலை
பழனிச்சாமி – சீதா ஆகிய இருவரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலையும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் அருகே உள்ள கிணற்றில், ஒருவர் பின் ஒருவராக விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவம் அறிந்த சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் நிலவழகன், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சூரமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடல்களையும் மீட்டனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.