வசூலைக் குவிக்கும் மவுனப் புரட்சியில் ‘மெய்யழகன்’!
* கள்ளங்கபடமில்லா நடிப்பில் கார்த்தி* உணர்ச்சிப்பிழம்பாய் அரவிந்த்சாமி
சென்னை, அக். 8–
கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” என்று அரவிந்த்சாமி மனம் திறந்தபோது அவரின் பெருந்தன்மை புரிந்தது.
“கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது” என்று நெகிழ்ந்தபோது கார்த்தியிடம், வாயில்லாப் பிராணிகள் மீதான பாசம் தெரிந்தது.
“ஆண்களிடம் இருக்கும் பெண்மையை ‘‘மெய்யழகன்’’ வெளிக்கொண்டு வந்திருக்கிறது” என்று தேவதர்ஷினி பாராட்டியபோது உள்ளம் ஒளிக்காதவர் என்று உணர வைத்தது.
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த மாதம் (செப்டம்பர் -27ந் தேதி) வெளியானது. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை ‘96’ படப்புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இந்நிலையில் ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அப்படி ஒரு கதை என்னிடம் வரும்போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன்’’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
2ம் உலகப் போருக்கு பின்…
30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்கள் அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் புரியும் என நம்பினேன். 2ம் உலகப் போருக்கு பிறகு மக்களுக்கு எண்ண ஓட்டம் ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு பிறகு வந்தவர்களின் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரி இருக்கும். தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வருவது, நம் கலாச்சாரங்களை விட்டுப் போய்விடுவது, நம் சரித்திரத்தை மறந்து விடுவது என நாம் மறந்த, அதே சமயம் நம் மனதில் இப்போதும் ஆழமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் எடுத்து கண் முன் வைத்தது போல் இந்த கதை இருந்தது என்று இயக்குனருக்கு (பிரேம்) பாராட்டு தெரிவித்தார்.
ஒவ்வொருவரின் மனசாட்சியாக
கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது. பழைய சைக்கிளுக்கு அவ்வளவு வேல்யூ இருக்கிறது என்பதை உணர முடிந்தது. நாம் யாருக்கோ தெரியாமல் செய்யும் ஒரு உதவி அவர்களது வாழ்க்கையையே மாற்றும்போது நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் தவறு என்ன இருக்கிறது ? இன்று ஒவ்வொருவரின் மனசாட்சியாக அவர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்றால் அதுதான் இசையின் வேல்யூ. எந்த இடத்திலும் சினிமா என்று தெரியாதபடி இருந்தது மகியின் ஒளிப்பதிவு இருந்தது என்று தனித்தனியாகப் பாராட்டினார் கார்த்தி.
அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும் என்று அறிவுறுத்தி, வாழ்வில் வழிகாட்டியவர் என்றார்.
உணர்வுகளின் தாக்கம்…
‘‘நாங்கள் சிறுவயதில் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும்போது உறவினர்கள் தங்களது தகுதிக்கு மீறி எங்களை கவனிப்பார்கள். உபசரிப்பார்கள். நாம் சாப்பிடுகிறோமா என கவனித்து பார்ப்பார்கள். சில நேரம் அதை கையில் தொட்டுப் பார்க்காமல் கூட திரும்பி வருவோம். இப்போது அதை நினைத்து பார்த்தால் நம் மீது அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டிய அவர்களை அங்கீகரிக்கிறோமா? அதை திருப்பிக் கொடுக்கிறோமா என திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். மீண்டும் ஊருக்கு சென்றால் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. அது போன்ற உணர்வுகளை நாம் இழந்து விட்டோமா அல்லது மறந்து விட்டோமா என்கிற நிலையில் தான் இந்த படம் அதை திரும்பவும் ஏற்படுத்துகிறது. அப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் அளவிற்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று சொல்லும்போது கார்த்தி நா தழுதழுத்தது.
என்ஜாய் பண்ணி நடித்தோம்
‘‘அரவிந்த்சாமியும் நானும் போட்டி போட்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையில் என்ஜாய் பண்ணி நடித்தோம். பிரேம்குமார் எழுதிய கதையில் உள்ள வரிகள் ஏற்படுத்தாத உணர்வை அர்விந்த்சாமி தான் திரையில் கொண்டு வந்தார். அதனால் அவருக்குத்தான் அந்த பாராட்டு சேரும்’’ என்றும் மனம் திறந்து பாராட்டினார் கார்த்தி.
24 நிறுவனம் இப்படியுமா…?
இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது, ‘‘ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இவ்வளவு ஒழுங்கு, இவ்வளவு சுதந்திரம் என இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதற்கு தயாரிப்பாளர் ராஜசேகருக்கு நன்றி. பொதுவாக நான் ஒருவருடன் அதிகம் சண்டை போட்டால் அவர்களை என் வாழ்க்கையில் இருந்து தூக்கி ஓரமாக வைத்து விடுவேன். அதற்கு பிறகு அவர்களிடம் பேச மாட்டேன். ஆனால் இப்பொழுது நான் அதிகம் சண்டை போட்டது ராஜசேகருடன் தான். அவரை என்னால் விட முடியவில்லை. மனசு விட மாட்டேன் என்கிறது. 2டி இந்தப் படத்தை தயாரிக்கவில்லை என்றால் இந்த படம் இந்த அளவிற்கு வந்திருக்குமா, இந்தப் படத்தை இயக்கி இருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்த விதத்தில் சூர்யா, ஜோதிகா இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. மெய்யழகன் மெய்யழகனாகவே வந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தான். படத்தின் கண்களாக இருக்கும் கார்த்தி, அர்விந்த்சாமி இருவருக்கும் நன்றி” என்று உணர்வுப்பூர்வமாகக் கூறினார்.
மகுடம் சூட்டியது போல….
2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது, “சமூக அக்கறை கொண்ட படங்களை பண்ண வேண்டும் என்பதுதான் 2டியின் அடிப்படை நோக்கம். அது நிறைய படங்களில் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அந்த படங்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல் இந்த மெய்யழகன் அமைந்துவிட்டது என்று பெருமிதத்தோடு கூறினார்.
‘‘நம் கூடவே பல மெய்யழகன்கள் இருப்பார்கள். நமக்காக எந்த நேரத்திலும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அவர்களை நாம் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம்.. ஆனால் அவர்களது மதிப்பை உணர வைத்து இருக்கிறது இந்த மெய்யழகன்’’ என்ற ராஜசேகரின் உணர்வு வெளிப்பாடு படு யதார்த்தம்.