செய்திகள்

குடுமியான்மலை சிகாநாதர் கோவில்

அருள்மிகு சிகாநாதர் திருக்கோவில் குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்

இந்த பழமையான திருக்கோவில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழியில் உள்ளது. இது ஒரு சின்னக் குன்றின் மீது பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு கோவில். இங்கு அநேக சிற்பங்களும் சிலைகளும் பல்லவ மன்னர் காலத்தில் சிற்பக் கலையின் சிறப்பை காண முடிகிறது.

இந்த தலத்தின் சிவபெருமானுக்கு குடுமியான் என்ற பெயர் வந்ததற்கு தலாபுராணத்தை அறியும் பொழுது சுவாரசியமாக உள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி கைகொடுத்தார் என்பது தெரிகிறது. இந்த கோவிலில் பணி புரிந்த அர்ச்சகர் ஒருவருக்கு ஒரு காதலி இருந்தாள். தினமும் கோவிலுக்கு வந்து இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர். ஒருநாள் இதுபோன்ற சந்திப்பில் கடமை தவறி இறைவனுக்கு கூட மாலை சூட்டவில்லை. அது சமயம் அந்த நாட்டு மன்னர் எந்த அறிவிப்பும் இன்றி திருக்கோவிலுக்கு வந்துவிட்டார். இதனால் அர்ச்சகர் நிதானமிழந்து கலவரத்துடன், இனி இறைவனுக்கு மாலை தொடுக்க முடியாது என்று வருத்தமடைந்து மன்னருக்கு பூஜை செய்த பின்னர், தன் காதலியின் தலையில் சூடிவந்த மாலையை மன்னருக்கு கொடுத்தார். அதை கண்ணில் ஒற்றி வைத்த மன்னர் அந்த பூவில் தலைமுடி இருந்ததைக் கண்ட மன்னன் கோபமுற்று, இந்த தவறு எப்படி நடந்தது என்று அர்ச்சகரிடம் கேட்டு அதிர்ச்சி தந்தார். அர்ச்சகர் ஒரு கண நேரம் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டார்.

பிறகு சமாளித்துக்கொண்டார்.

மன்னனிடம் ‘‘அரசே, இந்த இறைவன் தலைமீது குடுமி உள்ளது. அதிலிருந்து வந்தது தான் இந்த தலைமுடி ’’என்று கூறினார்.

இதை மன்னன் நம்பவில்லை அவர், இப்படி ஒரு பொய் பேசும் மனிதனை கண்டதில்லை. எங்கே, சிவலிங்கத்தின் தலைமுடியை காட்டு, இல்லையென்றால் உன் தலையை கொய்து விடுவேன் என்று கூறினார்.

அர்ச்சகர் சிவபெருமானே வேண்டி, ஐயனே நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் சதா சர்வகாலமும் உன் காலடியில் இருந்து பணி செய்து வருகிறேன். எனக்கு உயிர் பிச்சை கொடுத்து காக்க வேண்டும் என்று வேண்டி லிங்கத்தை காண்பிக்க அனைவரும் ஆச்சரியப்படும்படி சிவலிங்கத்தின் மீது குடுமி இருந்தது கண்டு வியப்புற்றனர்.

மன்னரிடம் அர்ச்சகர் தன் காதலியையும் அறிமுகப்படுத்தி, கூற இருவருக்கும் மன்னரே திருமணம் செய்து வைத்தாராம். எனவே தான் இந்த தலத்திற்கு குடுமியான் மலை என்ற பெயர் உண்டாயிற்று என்கின்றனர்.

எனவே இத்தலம் வந்து காதலர்கள் சிவபெருமானே வணங்கி வேண்டினால் காதல் நிறைவேறி, திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். மேலும் இந்த தலத்திற்கு சனிபகவானால் சோதிக்கப்பட்ட நளன் இந்த தலம் வந்து இறைவனை வணங்கி அருள் பெற்றதால், இது சனி தோஷம் நீக்கும் தலம் என்றும் கூறுகின்றனர்.

இங்குள்ள அன்னையின் நாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும்.

இந்த திருத்தலத்தில் கிரந்த மொழியில் சங்கீத விதிமுறைகளை கல்வெட்டில் வடித்துள்ளனர். அநேக சங்கீதவித்வான்கள் இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பொழுது, அந்த கிரந்த மொழியில் எழுத்தப்பட்ட இடத்தின் மீது தேனீக்கள் கூடுகட்டி நெருங்கமுடியாதபடி உள்ளது.

இந்த தலம் சிவாலயமாக இருந்தாலும் பெருமானின் தசாதவதாரத் தத்துவங்களை தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு குதிரையில் இளைஞனும் மற்றொரு குதிரையில் முதியவரும் செய்வது போன்ற சிலையை செதுக்கி உள்ளனர். இது கல்கி அவதாரத்தைக் குறிக்கும் என்பதும் கல்கி அவதாரத்தின் பொழுது அனைவரும் எந்த வித வயது பாகுபாடு இன்றி அழிக்கப்படுவர் என்பதைக் குறிப்பதாக கூறுகின்றனர்.

இங்கு சிவ பெருமான், பிரகார லிங்கத்தில் உள்ளார். தட்சிணமூர்த்தி விநாயகர் ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி, நரசிம்மர் மன்மதன் சிலை, பதஞ்சலி முனிவர், அகோர வீரபத்திரர், மோகினி அவதார விஷ்ணு, பத்து தலை ராவணன் என்று அழகிய சிற்பங்கள் உள்ளன.

தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து உள்ளது. மகா சிவராத்திரி , பிரதோஷம், ஆகிய தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அருள்மிகு சிகா நாதர் திருக்கோவில்

குடுமியான்மலை – 622 104, தொலைபேசி எண்.04322 – 221084, 98423 90416

மாதோர் கூறுகந்தேற தேறிய

ஆதியானுறை ஆடானை

போதி னாற் புனைந்தேத்துவார் தமை

வாதியா வினை மாயுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *