செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது: மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டது

புதுடெல்லி, மார்ச்.12-

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியானதை தொடர்ந்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் திருத்தங்கள் ெசய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதஅடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மை யினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைேவற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். எனவே, விதிமுறைகள் வெளி யிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளி யிடப்பட்டன. இத்துடன், அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு, 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களே இருக்கும்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வாக்குறுதி நிறைவேற்றம்

இந்த சட்டம், கடந்த நாடாளு மன்ற தேர்தலிலும், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலிலும் பாரதீய ஜனதாவின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு இது உதவியதாக பாரதீய ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சாதி, மதம், மொழியின் பெயரில் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்துவதை திரிணமூல் அனுமதிக்காது. சில நாட்களில் மத்திய அரசால் யாருக்கும் குடியுரிமை வழங்க முடியாது. இது தேர்தல் நாடகம்’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இவ்வாறு செய்துள்ளனர்’’ என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘கேரளாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *