செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது: விஜய் எதிர்ப்பு

சென்னை, மார்ச் 12–

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2 வது முறையாக வென்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு அவசர அவசரமாக குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக பாஜக அரசு நிறைவேற்றியது.

இந்த சட்டத்தின்படி, ‘2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்ட இந்த சட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

இலங்கை தமிழர், இஸ்லாமியர்

ஆனால் இந்த சட்டத்தால் என்ஆர்சி எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் ஆபத்து இருப்பதாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். குறிப்பாக ஒன்றிய அரசு சுட்டிக்காட்டிய சட்டத்தில் இஸ்லாமிய மதம் இல்லாதது மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் இலங்கை வாழ் அகதிகளும் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

கொரோனா பாதிப்பால் போராட்டங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் விதிகள் வகுக்கப்பட்ட பிறகு அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பலரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ‘சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (Citizenship Amendment Act) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *