வாழ்வியல்

குடியிருப்போர்களின் பிரச்சனைகள் சார்ந்த சட்ட நடைமுறைகள்!

நகர் வாழ் மக்களில் 42% வாடகை குடியிருப்புகளில் வாழ்பவர்களாக இருக்கின்றனர். பெருநகரங்களில் உள்ள சொத்துக்களுக்கு, அவற்றின் சந்தை விலை மிதமிஞ்சி இருப்பதால், பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டிலேயே குடியிருக்கின்றனர். அவ்வப்போது வாடகை உயர்த்தப்படுதல், முன்னறிவிப்பில்லாமல் வீட்டை காலி செய்ய சொல்லுதல் போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை பாதுகாக்க, ஏராளமான இந்திய சட்டங்கள் உள்ளன. நியாயம் இல்லாமல் காரணம் ஏதும் இல்லாமல், வீட்டை காலி செய்ய சொல்வதிலிருந்து காத்துக்கொள்ளும் உரிமையும், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு உண்டு.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த மாநில சட்டத்திற்கு உட்பட்டு, காலி செய்ய சொல்ல முடியும். வேறு எந்த வகையிலும் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியாது. சில சமயங்களில் வீட்டின் உரிமையாளர் வாடகையை வாங்காமலேயே காலம் கடத்தி வாடகை தரவில்லை என பொய் காரணங்கள் கூறி வீட்டை காலி செய்ய முயற்சிக்கலாம். அதற்கும் வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் தீர்வளிக்கிறது.

வாடகை கட்டுப்பாட்டு அதிகாரியை சந்தித்து, தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறி விளக்கலாம். குடியிருப்போர், நீதிமன்றம் அழைக்கும் போது போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு கீழ்காணும் வழிமுறைகளை கையாளலாம்.

* வாடகையை பெற்றுக் கொள்ளும்படி நோட்டீஸ் விடுதல்.

* வீட்டின் உரிமையாளர் வாடகையை பெற்றுக்கொண்டு அவரது வங்கி கணக்கு எண்ணை, பத்து நாட்களில் அனுப்பும்படி கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பலாம். வங்கி கணக்கு எண் விவரம் கிடைத்ததும் வாடகை பணத்தை உடனே அந்த கணக்கில் செலுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நோட்டீசுக்கு பதில் கிடைக்கவில்லை எனில், வீட்டின் உரிமையாளருக்கு பணவிடை மூலம் மணியார்டர் வாடகை பணத்தை அனுப்பி வைக்கலாம். அதற்கான ஆதாரத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் வரும் மாதங்களில் இவ்வாறு பணத்தை செலுத்த வேண்டும்.

குடியிருப்போரை காலி செய்ய வைப்பதற்கு விதிகள்

ஒப்பந்த காலம் முடிந்த பின், வீட்டில் குடியிருப்பவர் ஒரு மாத காலத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். குடியிருப்பவர் இறந்து விட்டால், அவரது சட்டபூர்வ நேரடி வாரிசுகள் ஐந்து வருட காலம் மட்டும் அந்த வீட்டில் குடியிருக்கலாம்.

வீட்டின் உரிமையாளர் தனது சொந்த உபயோகத்திற்காக வீடு தேவைப்படும்போது குடியிருப்போரை காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் உரிமையாளர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர், ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருந்தால், குடியிருப்பவரை உடனடியாக காலி செய்யும்படி கூறலாம்.

ஆண்டில் மூன்று மாதங்கள் வாடகை தர தவறினால், குடியிருப்போரை வெளியேறும்படி சொல்லலாம். அதேபோல், நியாயமற்ற ஒழுக்கக்கேடான செயல்கள் காரணமாக, வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *