புதுடெல்லி, ஜன. 24–
76வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேற்று இரவு இந்தியா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா வரவேற்றார். இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் 4வது இந்தோனேசிய அதிபர் இவர் ஆவார். ஆனால் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் இந்தியாவிற்கான முதல் அரசு முறைப் பயணம் இது.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இந்தோனேசியாவிலிருந்து 352 பேர் கொண்ட அணிவகுப்பு மற்றும் இசைக்குழு ஆகியவை பங்கேற்க உள்ளது. இந்தோனேஷிய அதிபரை இன்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேச உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியை நாளை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இந்தோனேஷிய அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் கலந்து கொள்கிறார்.
#republicday2025 #republicday #India