செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா அழைப்பை புறக்கணித்த சந்திரசேகர ராவ், கேஜ்ரிவால்

டெல்லி, ஜூன் 15–

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் 16 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ந் தேதி நடக்க உள்ளது.

இதில், ஆளும் பாஜ தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுதொடர்பாக உட்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ஆதரவை திரட்ட ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக, முக்கிய ஆலோசனை நடத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 11ம் தேதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். மம்தா அழைப்பின் பேரில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை முடிவு செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது.

2 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இதில், திமுக சார்பில் கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் பங்கேற்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ள கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

அதே போல், ஆலோசனை கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சியும் புறக்கணித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்த பிறகே, எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.