“குடிமகன்” கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன “குடிமகான்”?
கேள்வி எழுப்ப வைத்திருக்கிறதா இல்லையா, இந்த தலைப்பு?
அதுவே முதல் வெற்றி.
முழு நீள நகைச்சுவை சித்திரம் தர வேண்டும் என்ற தாக்கத்தில்,
“குடிமகானை” திரையில் ஓட விட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர் சிவகுமாரும், பிரகாசும்( நாளைய இயக்குனர் ஆறாம் பாகத்தில் இரண்டாம் இடம் வந்தவர்).
விஜய சிவன் -சுரேஷ் சக்கரவர்த்தி- நமோ நாராயணன் தவிர திரையில் முகம் காட்டும் பெரும்பாலானோர் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சியப்படாத முகங்கள்.
குளிர்பானமோ, ஜூஸோ குடித்தால்… உடம்பில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து… அதனால் ஏற்படும் விளைவு “மொடாக் குடியை” விட மிகவும் மோசமானது. நிலை தடுமாறச் செய்யும். என்ன செய்கிறோம்… ஏது செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு, “போதை” மாதிரி தள்ளாட்டத்தில் அசிங்கப்படுத்திவிடும் பொது வீதியில்.
இப்படி ஒரு வித்தியாசமான“ கோளாறு”க்கு ஆளாகும் நாயகனின் கதை தான்
“குடிமகான்”.
விஜய் சிவன் – ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர். ஒரு நாள் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்ப போகும் நேரம், குடித்த ஜூஸ் காரணமாக- உடம்பில் கார்போ ஹைட்ரேட் அளவு அதிகம் ஏறுகிறது. நிலை தடுமாறுகிறான். கத்தை கத்தையாய் ரூபாய்100 வைக்கும் எந்திரப் பகுதியில், ரூபாய் 500 ஐ கத்தையை வைக்கிறான். பணம் எடுக்க, போட்டா போட்டியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏடிஎம் எந்திரம் உடைக்கப்படுகிறது. ரூபாய் 8 லட்சம் அநியாயமாக எடுக்கப்படுகிறது. விளைவு- நாயகன் வேலை “காலி”.
போதை கோளாறு- குடும்பப் பிரச்சனை- பணம் இழப்பு – வேலை காலி என்று நாலா பக்கமும் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க சின்னா பின்னமாகும் நாயகன் விஜய் சிவன், நிலைமையை எப்படி சமாளிக்கிறான், இழந்த பணத்தை மீட்கிறான், குடும்பத்தை சகஜ நிலைக்கு கொண்டு வருகிறான்… என்பதே திரைக்கதை.
ஸ்ரீகுமார்- கதை. பிரகாஷ்- திரைக்கதை இயக்கம். மெய்யேந்திரன்- ஒளிப்பதிவு. தனுஷ் மேனன்- இசை.
பெரியவர்களோடுதான் குழந்தைகளுக்கு அனுமதி என யு /ஏ சென்சார் சர்டிபிகேட்.
லாஜிக் ..கீஜிக் எதுவும் பார்க்கக் கூடாது. இது எப்படி, அது எப்படி என்று கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. குளு குளு அறையில் ஹாய் ஆக உட்கார்ந்து பொழுதை போக்க…
விலா நோக சிரிக்க… வாய் விட்டு சிரிக்க… விழுந்து விழுந்து சிரிக்க…
திரையில் அடிக்கும் லூட்டியில் மக்கள் கவலையை மறக்க வேண்டும்!
இயக்குனர் பிரகாஷின் எதிர்பார்ப்பே இதுதான் ஏமாற்றம் இல்லை, அதில் (ஏ)மாற்றம் இல்லை!
வீ. ராம்ஜி