அறிவியல் அறிவோம்
ரூர்கேலா ஐ.ஐ.டி.யின் பாலிமர் மற்றும் செயல்முறைப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரான அபிஜித் மைதி, ரசாயனம் மற்றும் உலோகம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீரை அருந்தி பாதிக்கப்பட்ட மேற்கு வங்க கிராமத்திலிருந்து வந்தவர். அதன் காரணமாக ரசாயனத்தால் மாசு படிந்த குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தி உள்ளார். இறக்குமதி செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விட, இது 4 மடங்கு விலை குறைவானதாகும். கடந்த 2017-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவிலேயே பாதுகாப்பற்ற குடிநீரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1.04 கோடிக்கும் அதிகமானோர் குடிநீரால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலத்தடி நீரில் ஏற்படும் மாசுபாடு பல மாநிலங்களிலும் காணப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளே தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க தமக்கு உந்துதலாக இருந்ததாக பேராசிரியர் அபிஜித் மைதி கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், ”நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த இயந்திரம் ஈயம், தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற பிற உலோகங்களையும் அகற்றும். டெல்லியில் சமீபத்தில் நடந்த கண்காட்சியில் எங்கள் கண்டுபிடிப்பைப் பார்வையாளர்களுக்கு விளக்கினோம். குடிநீரில் மாசுபாடு உலகளாவிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பயன்படும்.
நான்கைந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் 20 முதல் 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அவர்களுக்கு இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
குறைந்தது 25 நிமிடங்களில் இந்த இயந்திரம் தண்ணீரை சுத்திகரித்து விடும். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.