செய்திகள்

குஜராத் மாநிலத்தில் கனமழை: வெள்ளப்பெருக்கில் 7 பேர் பலி

ஆமதாபாத், ஜூலை 12–

குஜராாத்தில் கனமழைக்கு 7 பேர் பலியாகி உள்ள நிலையில், அணைகளில் கிடுகிடுவென நீர்மட்டம் அதிகரித்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத், மஹாராஷ்ட்டிரா, தெலுங்கானாவில் பலத்த மழையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே குஜராத் மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆமதாபாத் நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 21.9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக அங்கு சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தங், நவ்சரி, தபி, வல்சத், பஞ்சமஹல், கேதா, சோடா உதேபூர் ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி கூறுகையில், மழை தொடர்புடைய சம்பவங்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை 63

கடந்த ஜூன் 1 முதல் மழை, இடி, மின்னல், சுவர் இடிதல், மழை நீரில் மூழ்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மீட்பு மற்றம் நிவாரணபணிகளில் ஈடுபட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மஹாராஷ்ட்டிராவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோதாவரி நதியில் எல்லை மீறி தண்ணீர் பாய்வதால் கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.