அகமதாபாத், ஜூலை 30–
குஜராத் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த 125 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியில் 10 மாடி கொண்ட ராஜஸ்தான் மருத்துவமனை உள்ளது. தனியார் அறக்கட்டளையால் இந்த மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடித்தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் 20 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியின் காரணமாக அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை ஏற்படுத்தியதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.