160 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியீடு
அகமதாபாத், நவ.10–
குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி 160 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதா இன்று வெளியிட்டது. இதில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5–ந்தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது
டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 2வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து தேர்தலில் 160 தொகுதிக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதா இன்று வெளியிட்டுள்ளது.
அகமாதாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ் மற்றும் மாநில பாரதீய ஜனதா தலைவர் சிஆர் பட்டீல் ஆகியோர் இணைந்து வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர்.
முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் கட்லோடியா தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜுரா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். தற்போது பதவியில் இருப்போரில் 30 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கெனவே பாரதீய ஜனதா கூறியிருந்தது.
காங்கிரசில் இருந்து பாரதீய ஜனதாவுக்கு சென்ற ஹர்திக் படேல், விரம்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் மோர்பிநகர் பால விபத்திற்குப் பின் ஆற்றில் குத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கன்டிலால் அம்ருதியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மோர்பி தொகுதியிலேயே அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ள ரிவபா, 2016-ம் ஆண்டு முதல் பாரதீய ஜனதாவில் இருந்து வருகிறார். இவர் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 1995–ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாரதீய ஜனதா இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
அந்த கட்சி தலைவரும், புதுடெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை கவரும் வகையில் பேசி வருகிறார்.இதனால் குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய ட்ரைபல் பார்ட்டி 2 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.