காந்தி நகர், பிப். 28–
குஜராத் கடற்பகுதியில், ரூ. 1000 கோடி மதிப்பிலான சுமார் 3300 கிலோ போதைப் பொருட்களுடன் 5 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சுமார் 3300 கிலோ போதைப் பொருட்களுடன் 5 பேரை கைது செய்துள்ளது. அவர்கள் ஈரானியர்கள் அல்லது பாகிஸ்தானியர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போர்பந்தர் அருகே வந்த கப்பலில் இருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் வேட்டை
கடலில் சந்தேகப்படும்படி, கப்பல் ஒன்று கண்காணிப்பு விமானம் மூலம் காணப்பட்டதாக இந்திய கடற்படை கூறியது. அதன் பிறகு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த கப்பலை இடைமறிக்க திட்டமிடப்பட்டது. அண்மைக்காலத்தில் இடம்பெற்றதில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை இதுவென கடற்படை தெரிவித்துள்ளது.
சுமார் 3089 கிலோ சரஸ், 158 கிலோ மெத்தம்பெட்டமைன், 25 கிலோ மார்பின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் இதன் விலை சுமார் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் சர்வதேச சந்தை மதிப்பு என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இவற்றை கடத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு ஏதேனும் தேச விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தி வருகிறது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே அரபிக்கடலில் இந்த நடவடிக்கை நடந்ததாக ஏடிஎஸ் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.