செய்திகள்

குஜராத்தில் வேகமாக பரவும் தோல் கழலை நோய்: 5 ஆயிரம் ஆடு, மாடுகள் உயிரிழப்பு

ஆங்காங்கே கால்நடைகளின் சடலங்கள் குவிந்து கிடப்பதால் மனிதர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம்

ஆமதாபாத், ஆக. 1–

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

குஜராத்தின் கச் மாவட்டத்தில் பெருமளவில் மாடுகள் உயிரிழந்துள்ளன. புஜ் பகுதியில் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகளின் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளிலும் கால்நடைகள் இறந்து வருகின்றன. கச், புஜ், ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இருப்பினும் இறந்துபோன மாடுகளின் சடலங்கள் பொது இடங்களில் குவிந்து கிடப்பதால் மனிதர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து புஜ் முனிசிபல் நிர்வாக தலைவர் கன்ஷ்யாம் தக்கார் அளித்த பேட்டியில், நாங்கள் உடல்களை அப்புறப்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் குழிகள் தோண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் சடலங்களை அப்புறப்படுத்த முடியவில்லை என்றார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 37,000 மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 1010 மாடுகள் இதுவரை இறந்துள்ளன. 1.65 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தோல் கழலை

கால்நடைகளுக்கு தோல் கட்டி நோயை ஏற்படுத்தும் ‘லம்பி ஸ்கின் வைரஸ்’ 1920-ல் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. பின்னர் கென்யா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது. கடல் மட்டத்துக்கு இணையான பிரதேசங்களில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். இப்பகுதியில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தி அதிகரிக்கும். கொசு, ஈக்கள் மூலம் பரவும் இந்நோய் தற்போது இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் தாக்கப்பட்ட மாடுகளின் தோலில் கட்டிகள் நிறைந்து காணப்படும். இதனால் பெரும்பாலும் இறப்புகள் ஏற்படுவதில்லை என்றபோதிலும், வெகுவாகப் பால் உற்பத்தி குறையும். மேலும் சினை பிடிக்காது, தரமான கன்றுகளையும் பிரசவிக்காது. வைரஸ் நோய்க்கு அடுத்து வரும் பாக்டீரியல் நோயால் இறப்புகள் அதிகரிக்கும்.

இதனால் பாக்டீரியல் நோயை கட்டுப்படுத்த ஊசி மருந்துகளை 3 நாட்களுக்கு செலுத்த வேண்டும். கிருமிநாசினி கொண்ட களிம்பு மருந்துகளை அந்தக் கட்டிகள் மீது தடவ வேண்டும். இந்நோய்க்கு தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து நோய் வரும்முன் செலுத்தி பாதுகாக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தோல் கழலை நோய் சமீப காலமாக இந்தியாவிலும் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2019–ம் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.