அகமதாபாத், ஜூன் 17–
பிபோர்ஜாய் புயல் தாக்குதலால் குஜராத்தில் மின் கம்பங்கள் சரிந்து 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையைக் கடந்தது.
மாலை 6.30 மணி முதல் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையைக் கடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்த இந்த கரை கடக்கும் நிகழ்வால் குஜராத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.
இருளில் 1000 கிராமங்கள்
பிபோர்ஜாய் புயல் கரையைக் கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான குடிசைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. மேலும் சுமார் 600 மரங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் புயலால், குஜராத் மாநிலத்தின் 4500 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவித்தனர். இந்நிலையில், பேரிடர் மீட்பு படையின் துரிதமான நடவடிக்கையால் 3400 கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 1000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.