செய்திகள்

குஜராத்தில் கொரோனா 2–ம் அலை; ஆமதாபாத்தில் தியேட்டர்கள், பூங்காக்கள் மூடல்: பொது போக்குவரத்தும் நிறுத்தம்

ஆமதாபாத், மார்ச் 18–

குஜராத்தில் கொரோனா 2–ம் அலை பரவலால் அகமதாபாத் நகரில் சினிமா தியேட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி முதல் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை உருவாகுவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகிய 4 நகரங்களுக்கு முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களது வழிகாட்டுதலில் மாநகராட்சி நிர்வாகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் கட்டாயமாக்க உள்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல வெளி மாநிலங்களிலிருந்து குஜராத் மாநிலத்துக்கு வருவோர் கட்டயமாக 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கொரோனா 2ம் அலை பரவும் சூழலில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 1,122 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து ஆமதாபாத் நகரில் சினிமா தியேட்டர், ஜிம், பூங்காக்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள், சந்தைகள் போன்றவை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல இரவு நேர ஊரடங்கு நேரத்தை மேலும் 2 மணி நேரம் அதிகரித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது. இதனை இரவு 10 மணி முதல் 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கு மார்ச் 31–ந்தேதி வரை அமலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *