செய்திகள்

குஜராத்தில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது ‘டவ் தே’ புயல்

காந்தி நகர், மே 17–

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘டவ் தே’ அதிதீவிர புயல், குஜராத்தில் போர்பந்தர் – -மதுவா இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது நேற்று அதிதீவிர புயலாக உருவெடுத்தது. நேற்று மாலை நிலவரப்படி கோவாவில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மும்பையில் இருந்து 450 கி.மீ. தொலைவிலும் குஜராத்தில் இருந்து 700 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடைந்து, குஜராத்தின் போர்பந்தர் – மதுவாக பகுதிகளுக்கு இடையே இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 155 கி.மீ. முதல் 185 கி.மீ. வரை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் டவ்-தே புயல் தற்போது மும்பையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

கர்நாடகா கேரளாவில் பலத்த மழை

கர்நாடகாவின் 6 மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. முதல்வர் எடியூரப்பா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘புயல் அச்சுறுத்தல் நீடிக்கும் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. அந்த மாநிலத்தின் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தில் 580 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். புயல் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று, மழை காரணமாக கோவாவில் நேற்று மின் விநியோகம் தடைபட்டது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறும்போது, ‘‘புயலால் கோவாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சரி செய்ய 2 நாட்களுக்கு மேலாகும்’’ என்று தெரிவித்தார்.

பாதுகாப்பான இடங்களில் 1.5 லட்சம் பேர்

குஜராத்தில் புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, ‘‘சவுராஷ்டிரா, போர்பந்தர், பாவ்நகர், அம்ரேலி, ஜுனாகத், கிர் சோம்நாத் உள்ளிட்ட பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் என்று கணித்துள்ளோம். கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 85 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா மருத்துவமனைகளில் மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

ஆந்திரா, மேற்குவங்கம், புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் குஜராத்துக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். இதேபோல மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளாவிலும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 79 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 22 கூடுதல் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராணுவம், கடற்படை, கடலோர காவல் படையும் மீட்புப் பணியில் உதவ தயார் நிலையில் உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். புயல் காரணமாக கொரோனா தற்காலிக மருத்துவமனைகள், ஆக்சிஜன் ஆலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்குமாறு இரு மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *