சென்னை, ஜூன்.21-
கீழடி நாகரிகத்தை உலகுக்கு பறைசாற்றியது எடப்பாடி பழனிசாமி தான் என்று அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பல பொய்களை அடிப்படையாக கொண்டு கீழடி என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். கீழடியில் அகழ்வாராய்ச்சியை தொடங்கியது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் கீழடி அகழ்வாராய்ச்சியே ஆரம்பித்தது என்று தி.மு.க. ‘பில்டப்’ செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 39 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இருக்கிறது. அதில், எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி கீழடியையும் தாண்டி ஈரோடு கொடுமணல் வரை 33 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.
கொடுமணலில் தான் முதலில் இரும்பு பதப்படுத்துகின்ற தொழில் நுட்பத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழன் கண்டுபிடித்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் தான் கண்டுபிடித்தது போல் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். கொடுமணலுக்கு முதலில் நிதி ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமி தான்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலத்தமிழ் மாநாடு நடத்தி கீழடியில் கண்டெடுத்த அரும்பொருட்களை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. அந்த கண்காட்சிக்கு பெயர் தான் ‘கீழடி என் தாய்மடி’. இதற்கு உறுதுணையாக இருந்தது எடப்பாடி பழனிசாமி தான்.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமி தான். அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு, அதன் ஆண்டு 2,500-ல் இருந்து 2,600 இருக்கும் என்று கண்டுபிடித்தது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான். கீழடி நாகரிகத்தை உலகுக்கு பறைசாற்றியது எடப்பாடி பழனிசாமி தான்.
ஆனால் கீழடியை கண்டுபிடித்தது மு.க.ஸ்டாலின் என்பது போல பெரிய அளவில் பொய் பரப்புகிறார்கள். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்திய அரசின் நிதி உதவியோடு, அண்ணா தி.மு.க. ஆட்சியில் தொல்லியல் துறைக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.105 கோடி வரை சராசரியாக ஒதுக்கப்பட்டது. தற்போதும் தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. அரசு அதனை வெளியே சொல்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





