திருப்புவனம், செப். 12
கீழடி அகழாய்வில் அழகிய பானை கிடைத்துள்ளது.
மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து அந்த குழியை மேலும் ஆழமாக தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண் அழகிய பானை முழு வடிவில் வெளிவந்துள்ளது. பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது. அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெம்பக்கோட்டையில்
மண்பாண்ட பாத்திரம்
இதே போல் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள் உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான மண்பாண்ட பாத்திரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. முன்னோர்கள் சமையல் பாத்திரமாக இதனை பயன்படுத்தி உள்ளனர். சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.