செய்திகள்

கி.ரா. மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்: முழு அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய உத்தரவு

சென்னை, மே 18–

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் வயது (98) மூப்பின் காரணமாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

ஸ்டாலின் இரங்கல்

கி.ரா. மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் கி.ராஜநாராயணனின் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை; அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை; ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்!

அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே!

அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்றவர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தில் 1922ம் ஆண்டில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது முழுப்பெயா். இதைச் சுருக்கி கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டாா்.

7ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர் 40 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதையான ‘மாயமான்’ 1958ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடா்ந்து பல சிறுகதைகளை எழுதி வந்தார்.

சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள், கிராமியக் கதைகள், கட்டுரைகள் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரைப் பதித்தார்.

இவரது கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக 2007ல் வெளியானது. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

‘கோமதி’, ‘கண்ணீா்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

1980களில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் கவுரவ பேராசிரியராகப் பணியாற்றினார்.

‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். கடந்த 2016–17ம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருதும் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டது.

‘வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’ என்றெல்லாம் போற்றப்பட்டவர். சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக 1998 முதல் 2002 வரை செயல்பட்டார்.

கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு திவாகரன், பிரபாகரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகர் புதுவை இளவேனிலுக்கும், இரு மகன்களுக்கும் கி.ரா. அளித்துள்ளார். இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை “கரிசல் அறக்கட்டளை” என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவரது இலக்கியப் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீட்டை அரசு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *