சிறுகதை

கிளினிக் | ராஜா செல்லமுத்து

என்னது நாய்க்குட்டி சாப்பிடாம படுத்து இருக்கா? அதுக்கு என்ன பிரச்சனை ஏதாவது பூச்சி கடித்ததா? வேற ஏதாவது பிரச்சனையா? இப்படி சாப்பிடாம இருக்காதே என்று பிரகாசமும் மனைவி கல்யாணியும் பேசிக்கொண்டார்கள்.

நேத்து எதுவும் சாப்பிடலங்க. அதுக்கு என்னமோ ஆயிடுச்சு போல என்று கல்யாணி சொன்னாள்.

நீ முன்னே பார்க்க மாட்டாயா? எனக்கு நீ போன் பண்ணி இருக்கலாமே? என்று கடிந்து கொண்டான் பிரகாஷ் .

நீங்க ஆபிஸ் வேலையா இருப்பீங்க . அப்படின்னு தான் நான் உங்களுக்கு போன் பண்ணல .அதனாலதான் நானே நாய்க்குட்டியைப் பார்த்துக்கிட்டே என்று மறுபடியும் கல்யாணி சொன்னாள்.

சோர்ந்து போய் படுத்துக் கிடந்த நாய்க்குட்டியைத் தொட்டுத் தூக்கி அதை லாவகமாக கைகளில் ஏந்தி

என்னடா என்ன பிரச்சனை? ஏன் சாப்பிட மாட்டேங்குற என்று கொஞ்சும் குரலில் கேட்டான் பிரகாஷ்.

அந்த நாய்க்குட்டி வளைய வளைய பிரகாஷின் கையை சுற்றியது.

எப்படி சோர்ந்துபோய் இருக்குன்னு பாரு . உனக்கு அறிவே கிடையாது என்று நாய்க்குட்டியைத் தூக்கினான்.

வா சீக்கிரம் வா, ஹாஸ்பிடல் போகலாம் ; போய் என்னன்னு கேட்டா தான் நமக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று நாய்க்குட்டியை காரில் ஏற்றினார்கள்.

சோர்ந்து போய் படுத்துக் கிடந்த நாய்க்குட்டி காரிலும் அப்படியே கிடந்தது .

பிரகாஷ் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த பெட் கிளினிக்கில் ஏற்கனவே ஆட்கள் குழுமியிருந்தார்கள்.

அங்கே டோக்கன் வாங்கிக் கொண்டு நிறைய மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணியை கையில் ஏந்திய படியும் காரில் வைத்தபடியும் நின்று கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ், கல்யாணியும் பெட் ரூமிற்குள் நுழைந்து தங்கள் நாய்க்குட்டிக்கு டோக்கன் போட்டு விட்டு வெளியே காத்திருந்தார்கள்.

அப்போது பெட் கிளினிக்கில் நின்றுகொண்டிருந்த, ஒருவரின் செல்போன் அலறியது.

ரொம்பவே கோபமாக செல்போனை எடுத்து அந்த நபர்

‘‘உனக்கென்ன பிரச்சனை? இழுத்துகிட்டு இருக்கா. சாப்பிட்டு தூங்கு’’ என்று போனில் கடிந்து பேசினான்.

அருகில் இருந்த மனைவி

ஏன் இப்படி பேசுறீங்க? யார் போன் பண்ணா ?என்று கேட்டாள்.

எங்க அம்மா, அதுக்கு ஏதோ முடியலையாம். சும்மா பேசிகிட்டு இருக்கு. அதான் ரெண்டு திட்டு திட்டினேன் என்று கணவன் சொன்னான். .

அதுக்கு வேற வேலையே இல்லயா? காய்ச்சல் தலைவலி வந்தா கசாயம் காய்ச்சி குடிக்க வேண்டியதுதானே? ஏன் நம்ம உயிரை வாங்குது என்று மனைவியும் பங்குக்கு பேச பெட் கிளினிக் நாயை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

இதை கேட்ட மற்றவர்கள் மனதிலும் அவர்கள் தாய் தந்தையை பற்றிய நினைவு வந்தது.

பிரகாஷ் மனைவி கல்யாணியை ஒரு மாதிரியாக பார்த்தான். அப்போது அவனின் செல்போன் அடித்துக் கொண்டிருந்தது.

யார் பேசுறது? என்று கல்யாணி கேட்டாள்.

எங்க அம்மா பேசுது? என்று பிரகாஷ் சொன்னான்.

அதுக்கு என்னவாம்? என்று கல்யாணி கேட்க

உடம்பு சரி இல்ல அப்படின்னு சொல்லுது என்று பிரகாஷ் சொன்னான்.

வயசான காலத்துல அதெல்லாம் வரத்தான் செய்யும். பேசாம படுத்து தூங்க வேண்டியதுதானே? சொல்லுங்க, பேசாம படுத்து தூங்கட்டும் என்று கல்யாணியும் கடிந்துகொண்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் பெட் கிளினிக் நாய்க்குட்டியை குட்டிகளை பிடித்துக்கொண்டு நின்றிருந்த நபர்களிடம் ஐயா நீங்க செல்லப் பிராணியை வளங்க ; தப்பு இல்ல. அதுக்கு சாப்பாடு கொடுங்க; அதுவும் தப்பில்லை. ஆனா, உங்க வீட்டில இருக்கிற தாய் தகப்பனையும் பாருங்க. அதுதான் முறை ; அதுதான் சரி. நீங்க அவங்களுக்கு செய்ற கடமை கடவுளுக்கு செய்றது மாதிரி. அவங்களை விட்டுட்டு இந்த செல்லப் பிராணிகளுக்கு செய்றதை கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

போங்க மனுஷனையும் பாருங்க ; நாய்க்குட்டியும் பாருங்க. எல்லாமே ஒரு ஜீவன் தான் என்று சுரீரென்று அந்த நபர் பேசினார்.

அங்கிருந்தவர்களுக்கு என்னமோ போல் ஆனது. அதுவரை அமைதியாக இருந்த சில நாய்கள் அவற்றின் பாஷையில் ஏதோ சொல்லிக் கத்தின. அதன் அர்த்தம் புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு புரியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *