சிறுகதை

கிளிச்சிறை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

‘ மலையெனக் குவிந்து கிடந்த சாம்பல் மூட்டைகளில் இருந்து ஒரு மூட்டையை மட்டும் லாகவமாக உருவி எடுத்து அதன் முடிச்சை அவிழ்த்துத் தன் முன்னால் இருந்த சீனாச்சட்டியில் சாம்பலைக் கொட்டினார் முனிசாமி.

அந்தச் சீனாச்சட்டியின் முன்னால் இருந்த தண்ணீர்க் குவளையிலிருந்து தன் கைகளால் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி சாம்பலைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

காற்றுப் பட்டால் சுற்றிப் பறக்கும் எரிந்து தீர்ந்த சாம்பல் ஈரம் பட்டதும் எழுந்திருக்க முடியாமல் சீனாச் சட்டியிலேயே கரைந்தது.

அந்தச் சட்டியின் ஓரத்தில் துளையிட்டு இருந்த துவாரத்தின் வழியாக சாம்பல் மெல்ல மெல்லக் கரைந்தோடியது.

அதுவரையில் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருந்த முனிசாமி கரைந்து ஓடும் சாம்பலைப் பார்த்ததும் தன் கண்களை அகலமாகத் திறந்து பார்த்தார்.

“ ஏய்! அங்க என்ன அப்படிப் பாத்துகிட்டு இருக்க? அந்தச் சீனாச்சட்டியில இருந்து ஆடகம், கிளிச்சிறை, சாம்புநாதம், சாதரூபம்னு தங்கம் வரப் போகுதா என்ன? இப்படி சீனாச் சட்டிய உத்து பார்த்துட்டு இருக்க?” என்று முனிசாமியைப் பார்த்து கோபமாகக் கேட்டாள் முனிசாமியின் மனைவி காளியம்மாள்.

‘’இல்ல கழுத முப்பது நாப்பது தடவைக்கு மேல சாம்பல அள்ளிப்போட்டு தண்ணிய ஊத்தி கரச்சுக் கரச்சுப் பாத்துட்டேன். ஒரு பொட்டுத் தங்கம் கூட வரல?” என்று வருத்தத்தோடு சொன்னார் முனிசாமி.

“எப்படி வரும்? நீ என்ன தங்கத்தவா ஒரசிக்கிட்டு ஒக்காந்திருக்க? தங்கப்பட்டறையில இருந்து வாங்கின சாம்பலத் தானே கரைச்சுக்கிட்டு இருக்க?”

“ம்க்கும் … வில்லங்கமா பேசுறதில நீ தான் வில்லியாச்சே… பேசு… பேசு… “

‘“ஒன்னோட மொளிங்கால் மூள வத்த வத்த இந்தச் சாம்பலைக் கரைச்சாலும் ஒரு பொட்டுத் தங்கத்த ஒன்னால கண்டுபிடிக்க முடியாது. என்னமோ இதுல இருபத்திநாலு கேரட் தங்கம் வர்றது மாதிரி என்னையும் வேலை வெட்டிய விட்டுட்டு ஒக்கார வச்சிட்ட? சாம்பல் மூக்குல ஏறி மூளைய அடச்சதுதான் மிச்சம். இனிமே இங்க நான் குத்த வச்சுட்டு இருந்தேன்னா இருக்கிற சாம்பல் எல்லாம் என் மண்டைக்குள்ள போயி புத்துக் கட்டி ஒக்காந்துக்கிரும்“ என்று முனிசாமி சாம்பல் கரைக்கும் இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள் காளியம்மாள் .

காலையிலிருந்து சாம்பலைக் கரைத்துக் கரைத்து கரைந்து போன முனிசாமிக்குப் பசி எடுத்தது.

“ ஏ … கழுத…! குடிக்க ஏதாவது இருந்தா கொண்டு வா. தொண்டத் தண்ணி வத்திப் போச்சு. கண்ணு ரெண்டும் கட்டிக்கிட்டு என்னமோ மாதிரி கிறுகிறுன்னு வருது. சீக்கிரம் கொண்டு வா” என்று வீட்டுக்குள் போன காளியம்மாளைக் கூப்பிட்டுச் சொன்னார் முனிசாமி.

“ வேலையில்லாத மாமியா மருமகனப் போட்டுத் தாலாட்டுனாளாம். அப்பிடி ஆகிப்போச்சுய்யா உன்னோட கத.பொன்னா வெளையுற பூமிய வித்துப்புட்டு, இந்தச் சாம்பல் மூட்டைகளை வாங்கி கரச்சுக் கரச்சுக் கடைசியில நீ கரஞ்சு போனதுதான் மிச்சம். ஆச யாரை விட்டுச்சு? என்று நெக்குருகிப் பேசிக்கொண்டிருந்தாள் காளியம்மாள்.

அவள் பேசுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார் முனிசாமி.

“தங்கப்பட்டறையில இருந்து சாம்பல வாங்கிட்டு வந்து கரச்சு எடுத்தோம்னா தங்கம் கெடைக்கும்னு, எவனோ ஒரு கேனப் பய சொன்னதக் கேட்டு இந்த கிறுக்குப் பயலும் இந்த இத்துப்போன வேலைய செஞ்சிட்டு இருக்கான். வருசம் மூணுக்கு மேல ஆச்சு. ஒரு குண்டு மணித் தங்கம் கூட வந்து சேரல.வேலையும் பொழுதும் வெட்டியாப் போனதுதான் மிச்சமே தவிர வேற எதுவும் உருப்படியா இன்னும் வரல“. என்று புலம்பிக்கொண்டே பழைய சோத்தை ஒரு பாத்திரத்தில் அள்ளிப் பாேட்டு நீச்சத் தண்ணியை அதில் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள் காளியம்மாள்.

அப்போதும் சீனாச்சட்டியில் சாம்பலை அள்ளிப் போட்டு கரைத்துக் கொண்டிருந்தார் முனிசாமி.

“தங்கத்த கண்டுபிடிக்கிற மனுசா? வந்து சாப்பிடுய்யா. வயிறு ஒட்டிப் போயி வருச்சாத்தட்டு எலும்பெல்லாம் வரிசையா எந்திரிச்சு நிக்குது. சாப்பிடாமக் கொள்ளாம சாம்பல கரச்சுக் கரச்சு கடைசில நீயும் சாம்பல் ஆயிருவ போல?” என்று முனிசாமியை முடுக்கினாள் காளியம்மாள்.

‘“நீ சொல்றது சரிதான் கழுத….! அப்படித்தான் ஒரு நப்பாச. அப்படி இப்படின்னு பொட்டுப் பொட்டா எடுத்து மொத்தமாகச் சேத்தமுன்னா தங்கம் வந்து சேரும்னு நெனச்சேன். இல்லையே, தங்கம் வரலையே?” என்று வருந்தினார் முனிசாமி.

“வராதுய்யா , வராது. ராத்திரிப் பகலா ரத்தம், வேர்வை சிந்தி ஒழைச்ச விவசாயமே நம்மள ஏமாத்தி புடிச்சு. இந்தத் தங்கப்பட்டற சாம்பலா வந்து நம்மளத் தாங்கிப் பிடிக்க போகுது. ஏதோ நம்ம கெரகம் இப்படிப் போராடி வாழணும்னு கடவுள் நம்ம தலையில எழுதி வச்சிருக்கான் பாேல. போறது வரைக்கும் போகட்டும் நம்ம பொழப்பு. குடிச்சும் குடிக்காம கெடக்காேம். நாலு பேரப் போல நாமளும் நல்ல முறையில வாழணும்னு தான் நினைச்சோம்.ஆனா நம்ம தலையில என்ன எழுதி இருக்குன்னு தெரியல? இருக்க வரைக்கும் இருப்போம். இல்லன்னா குண்டி மண்ணத் தட்டி விட்டு செவனேன்னு போய்ச் சேர வேண்டியதுதான்“ என்று கண்கள் கலங்கச் சொன்னாள் காளியம்மாள்.

“கழுத… ஏன் இப்படி நெக்குருகி நிக்கிற? இப்பிடி நீ மறுகி நின்னா நான் எங்கன போய் நிப்பேன்? ஆலமரமா வளந்து நின்னாேம்.அனுசரணையா இருக்க ஒரு ஆம்பளப் புள்ளைய ஆண்டவன் நமக்குக் குடுக்கல. பொட்டப்புள்ள ரெண்டையும் கொடுத்துட்டான். அதுகளுக்கு நகை, நட்டு, சீரு செனத்தி செஞ்சு ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுக்கிறதுக்குள்ள நம்ம உசுரு போயிரும் போல” என்று புலம்பிக்கொண்டே பழைய சோத்துச் சட்டியைத் தன் முன்னால் இழுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்தார் முனிசாமி.

“யோவ், ஒனக்கு ஏதாவது இருக்காய்யா? செம்மண் புழுதியில வெவசாய வேல செஞ்சுட்டு கைகால் கழுவாம அப்படியே சாப்பிட்டமே? அந்த நினைப்புல நீ சாப்பிட ஒக்காந்திட்டியா? இது சாம்பல் மண்ணுய்யா. இந்தச் சாம்பல் நம்ம வயித்துக்குள்ள போச்சுன்னா அம்புட்டு தான் சோலி முடிஞ்சிரும்.நம்ம மண்ணு நமக்கு மாத்திர மருந்து மாதிரி. நம்ம ஒடம்புக்குள்ள பாேனா நல்லது தான் செய்யும். இது வெசம்யா “

காளியம்மாள் பேசுவதை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார் முனிசாமி.

“இப்ப உன் கையில ஒட்டியிருக்கிற இந்தச் சாம்பலோட நீ சாப்பிட்டன்னு வையி மறுநாளே ஒனக்குச் சங்கு ஊத வேண்டியதுதான் “ என்று காளியம்மாள் சிரித்துக் கொண்டே சொல்லவும்

“நெசந்தான் கழுத… இன்னும் நான் காடு கரையில வேலை செய்ற நெனப்புல தான் இருக்கேன். செத்த பொறு” என்று விடியக் கருக்கலில் உட்கார்ந்த இடத்தை விட்டு,

“எப்பா “ “என்று தன் முட்டியில் கைவைத்து எழுந்தார் முனிசாமி.

‘சுருக்கம் விழுந்த உடலில் இடுப்பை விட்டு சற்றுக் கீழே இறங்கிய தன் இடுப்பு வேட்டியை இரு கைகளைக் கொண்டு மேலே ஏற்றிவிட்டு கொண்டு கை கழுவப் போனார் முனிசாமி’

அதுவரையில் அவர் கரைத்துக் கொண்டிருந்த சீனாச்சட்டியில் சாம்பல் வழிந்த தடம் இருந்தது. தண்ணீர் போன பாதை எங்கும் சாம்பல்க் கோடுகள் திட்டுத்திட்டாய்த் தேங்கி நின்றன.

சாம்பல் மூட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பாதிச் சாம்பல் வெளிவந்த நிலையில் ஒரு சாம்பல் மூட்டை கீழே சரிந்து கிடந்தது.

சட்டை இல்லாத உடம்போடு முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டிருந்த முனிசாமியைப் பார்த்தாள் காளியம்மாள்.

களத்து மேட்டு ஞாபகங்கள் அவள் கண்களில் நிறைந்தன.

“ஏய்… காளியம்மா… ஏ …. காளியம்மா…! ஒன்னத் தாண்டி,வெள்ளாம காட்டுக்குள்ள மாடு மேஞ்சுக்கிட்டு இருக்கு. அத ஓடிப் போய் பத்தி விடு. இன்னும் கடல புடுங்க ஒரு வாரம் தான் இருக்குது .அதுக்குள்ள மாடு மேஞ்சுச்சுன்னா கடல புடுங்க முடியாது” என்று மேற்கே நெல் விளைந்த நிலத்துக்கு நீர் பாய்ச்சியபடியே தூரத்தில் இருந்து குரல் கொடுத்தார் முனிசாமி

கடலைக்காட்டில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்த காளியம்மாளின் காதுகளில் முனிசாமி ஏதோ சொல்கிறார் ‘‘ என்று நிமிர்ந்து பார்த்தபோது, கடலைக் காட்டில் மாடு மேய்ந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்தாள் காளியம்மாள்.

“ஓ, இதுக்குத் தான் இந்த மனுசன் கத்துறானா? கடலச் செடிய வேரு வரைக்கும் மாடு தின்னாலும் மண்ணுக்குள்ள இருக்கிற கடலய இந்த மாடுக என்ன வேரோடவா புடுங்கித்துன்னு புடும்? மேல இருக்கிற செடிய மட்டும் தான மேயும். கீழ இருக்கிற கடலய ஒன்னும் செய்ய முடியாது. நீங்க சாப்பிடுங்க” என்று மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை விரட்டாமல் வேடிக்கை பார்த்தபடியே மறுபடியும் காட்டில் குனிந்து வேலை செய்ய ஆரம்பித்தாள் காளியம்மாள்.

“ஏ … குருடி…. கழுத…. கடலக் காட்டுல மாடு மேஞ்சுக்கிட்டு இருக்கு, அங்கயிருந்து நான் கத்திக்கிட்டு இருக்கேன். அத வெரட்டி விடாம வேடிக்க பாத்துட்டு இருக்கியே? வெவரம் கெட்டவளே? இவளுக்கு மூளை ஏதும் கெட்டுப் போச்சா?” என்று கோபம் கொப்பளிக்கக் கொப்பளிக்க மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்துக்கு வேகமாக ஓடி வந்தார் முனிசாமி.

மாடுகளை விரட்டாமல் களை பறித்துக் கொண்டிருந்த காளியம்மாளை ஒருமுறை முறைத்து விட்டு மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைத் தூரம் துரத்தி விட்டார்.

“ஏண்டி ஒனக்கு கண்ணு ரெண்டும் அவிஞ்சு கிவிஞ்சு போச்சா என்ன? கடல காட்டுக்குள்ள மாடுக மேஞ்சுக்கிட்டு இருக்கு. நீ என்னடான்னா செவனேன்னு அதப் பாத்துட்டு வேலை செஞ்சுகிட்டு இருக்க. ஒன்ன எல்லாம் “ என்று தடித்த வார்த்தைகளை உதிர்த்தார் முனிசாமி.

“ஏய்யா,இப்பிடி தொண்டத் தண்ணி வத்த வத்தப் பேசிட்டு இருக்க? இப்ப என்ன ஆகிப்போச்சு? கடலச் செடியத் தானே மாடு மேஞ்சுக்கிட்டு இருக்கு. உன் கடல மண்ணுக்குள்ள பத்திரமா தான இருக்குது? பசிக்குதுன்னு தான இந்த மாடுக இதச் சாப்பிட்டுட்டு இருக்குக. சாப்பிட்டுப் போகட்டுமே? நீ சாப்பிட்டு இருக்கும் போது ஒன்னோட சாப்பாட்ட புடுங்குனா எப்படி உனக்கு கோவம் வரும்? அது மாதிரிதான்யா இந்த மாடுகளும் சாப்பிடட்டுமே. எம்புட்டுச் சாப்பிட்டுப்புடும். வயிறு நெறைஞ்சா தன்னால அதுவே வயக்காட்டை விட்டுப் போயிரும். நம்மள மாதிரி வயித்துக்கு சாப்பிட்டு கையில பார்சல் எல்லாம் எடுத்துட்டு போகாதுக” என்று ஜீவகாருண்யம் பேசினாள் காளியம்மாள்.

“ஆமா,இவ பெரிய வள்ளலார் வாரிசு… எரக்கம் காட்டிகிட்டு இருக்கா. இப்ப ஒனக்கு இந்தப் பிரச்சனை தெரியாது. நாளைக்கு கடல புடுங்கும் போது தான் அதோட கஷ்டம் நமக்குப் புரியும்” என்று எதார்த்தம் பேசினார் முனிசாமி

“மனுசனத் தவிர எந்த சீவனும் இன்னொரு மனுசனுக்குத் துரோகம் செய்றது இல்ல. நாம நெனச்சத விட இந்தத் தடவை வெளைச்சல் அதிகமா இருக்கும்யா” என்று அடித்துச் சொன்னாள் காளியம்மாள்

அவள் சொன்னது போலவே எப்போதும் இல்லாமல் அந்தப் போக விளைச்சல் அதிகமாகவே இருந்தது.

கடலை, நெல், மூட்டைகள் வீட்டை நிறைத்து அடுக்கப்பட்டிருந்த அந்தக் காட்சி காளியம்மாளின் கண்களில் நிறைந்து வழிந்தது.

“என்ன காளியம்மா, நெல்லும் வீடு நெறயா கடல மூட்டையும் அடுக்கி வச்சிருந்த எடத்துல இப்ப வெறும் சாம்பல் மூட்டைகள அடுக்கி வச்சிருக்கோம்னு தானே வருத்தப்பட்டு அழுதுகிட்டு இருக்கே? என்ன செய்ய? நாமளா வெவசாயத்த வேணாம்னு சொன்னோம். வெவசாயப் பொருளுகளுடைய வெலவாசி ஏறிப் போச்சு. ஆனா, வெளையுற பொருளுக்கு நாம வெல வச்சு விக்க முடியல. ஏக போகமா வெளஞ்சாலும் செலவு செஞ்சதுக்கு ஈடா வருமானமும் வரல. ஒட்டிக்கு ரெட்டியா கடன ஒடன வாங்கி வாங்கி கடன்காரனா ஆனது தான் மிச்சம். இன்னும் கல்யாணம் கட்டிக் கொடுக்காத ரெண்டு பொம்பள புள்ளைங்க .நகை நட்டு ஏதும் சேத்து வைக்கல. காசு பணமும் கையில இல்ல. இந்த வெள்ளாமையும் நம்மள ஏமாத்திருச்சு. இனிமே இந்த நெலத்துல நம்ம உழைப்ப போடுறது வீண், அப்பிடின்னு சொல்லித்தான், இந்த நெலத்த பாதிவெலைக்கு வித்துட்டு தங்கப் பட்டறையிலிருந்து சாம்பல் வாங்கிட்டு வந்தோம். ஆனா நம்ம நெலம இப்ப தலைகீழா மாறிப்பாேச்சு “ என்று முனிசாமி பேசுவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் காளியம்மாள்

“சாம்பல கரச்சு எடுத்தம்னா அதுல இருந்து பாெட்டுப் பொட்டாத் தங்கம் வரும். அந்தத் தங்கத்த சேத்து வச்சு ரெண்டு பிள்ளைகளையும் கரை சேத்துரலாம்னு நெனச்சிட்டு இருந்தோம். பாதகத்தி வருஷம் பூராம் கரச்சுப் பாத்தோம். சாம்பல் தான் கரஞ்சது. தங்கம் வந்து சேரலயே? விவசாயம் தான் நம்மளக் கால வாரிவிட்டுருச்சு. இந்தத் தங்கப்பட்டற சாம்பலும் நம்மள தவிக்க விட்டுருச்சே? ’’

என்று சோகமாகச் சொன்னார் முனிசாமி.

“இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்பட்டா இப்படித்தான்யா நடக்கும். அன்னைக்கே படிச்சுப் படிச்சு சொன்னேன். நீ தான் கேக்கல. நெலத்த வித்த மொத்த பணத்தையும் இந்த சாம்பல்ல போட்டுட்ட. இந்த சாம்பலக் கரச்சு அதுல இருந்து வர்ற தங்கத்தச் சேத்து வச்சு ரெண்டு பிள்ளைகளையும் கட்டிக்குடுத்துடலாம்ன்னு கனவு கண்ட. ஆனா அப்படி நடக்கலையே?” என்று கோபமும் அழுகையும் கலந்த குரலில் கேட்டாள் காளியம்மாள்.

“அப்பிடித்தான் கழுத, ஒருத்தன் சொன்னான். அவனும் இதே மாதிரி தங்கப்பட்டறையில சாம்பல வாங்கிட்டு வந்து நெறயத் தங்கம் எடுத்து அவனாேட பிள்ளைகளையும் கட்டிக் குடுத்தேன்னு எனக்கு ஆசை வார்த்தை சொன்னான். அத நம்பித்தான் நிலத்த வித்து இந்தச் சாம்பல் மூட்டைகளை வாங்கினேன். மத்தபடி எனக்கும் வேற எதுவும் தெரியாது “ என்று நா தழு தழுக்கச் சொன்னார் முனிசாமி.

“ ஒருத்தனுக்கு கெடச்சா நமக்கும் கெடைக்கும் அப்படிங்கிற மூடநம்பிக்கையில இந்தச் சாம்பல் மூட்டைகள வாங்கிட்டு வந்துட்ட அப்படித்தானே? பாப்போமே மொத்த மூட்டையும் கரச்சு பாரு. எவ்வளவு தங்கம் சேரும்னு” என்று முனிசாமியை முறைத்து விட்டுப் போனாள் காளியம்மாள்.

மூட்டை மூட்டையாய்க் கிடந்த சாம்பல் மூட்டைகளைப் பிரித்துக் கரைத்துக் கரைத்துப் பார்த்தார் முனுசாமி.

இருபது, முப்பது தங்கப் பொட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. அது மொத்தம் ஒரு கிராம் தங்கம் கூடச் சேராமல் இருந்தது.

“என்னய்யா , எல்லா மூட்டையும் கரச்சு பாத்தாச்சா? எதுவும் சொல்றது மாதிரி இல்லையே? இத நம்பிச் சிறுகச் சிறுகக் கடன் வேற வாங்கிச் சேத்து வச்சிருக்கோம். ரெண்டு பொம்பளப் பிள்ளைகளும் நுனி மூக்குத் தட்டுக்கு கூட வழியில்லாம நிக்கிறாங்க. இப்ப என்ன செய்யப் போறோம்?” என்று மாலை மாலையாக அழுது கொண்டிருந்தாள் காளியம்மாள்.

பித்துப் பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்த முனிசாமியை யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.

யாரது? என்று உற்றுக் கவனித்தார் முனிசாமி.

“என்ன முனிசாமி கோலார் தங்க வயல்ல இருந்து தங்கத்த எடுத்து ஒடனே மொத்தக் கடனையும் அடைச்சிருவேன்னு ரொம்ப வீராப்பா பேசினே? தங்கம் கெடச்சதா இல்ல? வைரம் கெடச்சதா? எது கெடச்சாலும் எங்ககிட்ட குடுய்யா. குடுத்த கடனுக்கு ஈடா தங்கத்தையும் வைரத்தையும் வச்சுக்கிறோம்” என்று வீட்டின் வெளியே நின்று கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் கடன் கொடுத்தவர்கள். மறு பதில் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார் முனிசாமி.

வீட்டை விட்டு வெளியே வந்தாள் காளியம்மாள்

“ஐயா என் வீட்டுக்காரரு புத்தி கெட்ட தனமா எதையோ செஞ்சுட்டாரு. கொஞ்சம் பொறுத்துக்கோங்க. உங்க பணத்த எப்பிடியும் வட்டி முதலுமா குடுத்திர்றோம்” என்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டாள் காளியம்மாள்

“ ஒன் புருஷன் தான் புதையல் கிடைக்கும்னு நினைச்சு பொதக்குழியில போய் விழுந்திட்டான். நீ ஆறுதல் வார்த்த சொல்லி எங்கள வெறுமனே அனுப்பி வைக்க பாக்கிறியா? அது முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பணம் எங்களுக்கு வந்து சேரல… நடக்கிறதே வேற “ என்று பயமுறுத்திவிட்டுச் சென்றார்கள் கடன் கொடுத்தவர்கள் .

வெளியூர் விடுதியில் படித்துக் கொண்டிருக்கும் தன் இரண்டு பெண் பிள்ளைகளான சாந்தி, மீனாட்சியை அன்று இரவே அழைத்து பேசினார்கள்.

“கண்ணுகளா ,நீங்க ரெண்டு பேரும் நல்ல முறையில படிச்சு ஒசந்த வேலைக்கு போகணும். ஏதோ எங்களால ஆன மட்டும் உங்கள படிக்க வச்சிட்டாேம். எங்களால அவ்வளவுதான் முடியும். இனி கர சேர வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அடுத்த வாரம் ஊருக்கு வாங்க . உங்கள பாக்கணும் போல இருக்கு” என்று தன் இரு மகள்களிடமும் பேசினார்கள் காளியம்மாளும் முனிசாமியும்.

“ஏப்பா இப்படி பேசுறீங்க? நாங்க ரெண்டு பேரும் நல்ல முறையில படிச்சு நல்லா முன்னுக்கு வந்து உங்கள காப்பாத்துவோம்பா. நீங்க கண் கலங்காதீங்க. “ என்று இரு மகள்களும் உறுதி சொன்னார்கள்.

கடன்காரர்களின் குடைச்சலும் வாழ்வதற்கான ஆதாரமும் இல்லாமல் இறுதியில் வெறுமை வறுமையாய் எஞ்சி நின்றது.

அன்று இரவு, தன் வீட்டைச் சுற்றி மண்ணெண்ணயை ஊற்றினார், முனிசாமி. தன் உடம்பிலும் காளியம்மாளின் உடம்பிலும் ஊற்றித் தீயைப் பற்ற வைத்தார்.

மளமளவென இரண்டு உடல்களும் தீயில் எரிந்தன. தகிக்கும் அனலில் இருவரும் உயிரோடு வெந்து கொண்டிருந்தாலும் வாய்விட்டு அழுவதற்குக் கூட அவர்களுக்குத் திராணியில்லை.

உடலில் பரவும் உஷ்ணத்தை விட மரியாதை, மானம், பெரிது என்று தங்கள் அழுகையையும் தேகத்தில் தீ எரியும் வலியையும் பொறுத்துக் கொண்டு, சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் பூமியில் மாண்டு விழுந்தார்கள்.

மொத்த வீடும் அங்கிருந்த பொருட்களும் இரண்டு உடல்களும் சாம்பலாய்ப் பூத்துக் கிடந்தன.

தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் சொல்லப்பட்டது. எரிந்த வீட்டில் எஞ்சியதைக் காப்பாற்றத் தண்ணீர் அடித்தார்கள்.

“வெவசாயத்த விட்டுட்டு தங்கப் பட்டறயில இருந்து சாம்பல வாங்கிட்டு வந்து தங்கம் கெடைக்கும்னு நினைச்சு பாவம் முனிசாமி தெனமும் சாம்பல கரைச்சிக்கிட்டு இருந்தான். நெறயத் தங்கம் வரல. எந்தச் சாம்பல தெனமும் கரைச்சுக்கிட்டு இருந்தானாே? கடைசியில அவனும் அவன் பொண்டாட்டியும் சாம்பலா போய்ட்டாங்க பாத்தியா? இது தான்யா விதிங்கிறது” என்று ஊர் மக்கள் எல்லாம் ஒன்றாகப் பேசினார்கள்.

மகள்கள் சாந்தியும் மீனாட்சியும் சிறிது நேரத்திற்கெல்லாம் கதறியடித்துக் கொண்டு எரிந்த வீட்டுக்கு வந்தார்கள்.

‘அடுத்த வாரம் வாங்க உங்கள பாக்கணும்னு சொன்னது? இந்த நெலமையில உங்களைப் பாக்கத் தானா? என்று கதறி அழுதனர் இரு மகள்களும்

“ஏ.. சாந்தி, மீனாட்சி, ஒங்க ரெண்டு பேருக்கும் கிளிச்சிறைத் தங்கத்தில தாலி செஞ்சு, ஒங்க ரெண்டு பேருக்கும் ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கிறோம் பாரு”என்று காளியம்மாள் முன்பு சொன்னது ஞாபகம் வந்தது.

‘“ கிளிச்சிறைன்னா என்னம்மா? என்று சாந்தியும் மீனாட்சியும் கேட்க,

“அவளுக்கு என்னம்மா தெரியும். தங்கத்தில ஆடகம், கிளிச்சிறை , சாம்பு நாதம், சாதரூபம்னு நாலு வகை தங்கம் இருக்கு, . கிளி கழுத்தில இருக்கிற நிறம் மாதிரி இருக்கிற தங்கம் தான் கிளிச்சிறைத் தங்கம்ன்னு சொன்னேன். அத அப்பிடியே பிடிச்சுக்கிட்டா ஒங்க அம்மா. அவ சொன்னது மாதிரியே ஒங்க ரெண்டு பேத்துக்கும் கிளிச்சிறைத் தங்கத்தில தாலி செஞ்சிரலாம்” என்று அப்பா முனிசாமியும் சொன்னதும் இருவருக்கும் ஞாபகம் வர, இருவரும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள்.

“வீடு பூராம் எரிஞ்சு சாம்பலா போச்சு. மண்சட்டியத் தவிர, எடுத்து சேகரிக்க வேற எந்தப் பொருளும் கைல தட்டுப்படல. வீட்டுக்குள்ள போய் பாருங்க.ஏதாவது ஒங்களுக்கு கெடச்சா எடுத்துட்டு வாங்க” என்று தீயணைப்பு வீரர்கள் சொல்ல ,

மீனாட்சியும் சாந்தியும் எரிந்து முடிந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

வீடு முழுவதும் சாம்பலாய்க் கிடந்தது. எரிந்த இடங்களை ஒவ்வொன்றாய்ச் சீர்படுத்தித் தண்ணீர் அடித்துச் சுத்தம் செய்தனர், தீயணைப்புத் துறையினர். தங்கப் பட்டறைச் சாம்பல் தரை முழுவதும் வழிந்தோடியது.

முனிசாமி சாம்பலைக் கரைக்கும் பாேது அவர் கையில் சிக்காதத் தங்கப் பாெட்டுகள், தண்ணீர் போன வழிகளில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன.

‘யார் அம்மா? யார் அப்பா? என்று தெரியாத அளவிற்கு இருவரும் ஓரிடத்தில் எரிந்து கரியாய் சாம்பலாய் நிறைந்திருந்தார்கள்.

இருவரையும் திகைத்துப் போய்ப் பார்த்தனர் சாந்தியும் மீனாட்சியும்

“ஐயோ …. அம்மா, அப்பா …. இப்படி எங்கள விட்டுட்டு போயிட்டீங்களே? என்று,

தீயில் வெந்து பொருமியிருந்த சாம்பலை இரு பிள்ளைகளும் தொட்டுத் தொட்டு அழுதார்கள்.உப்பிப் பாேயிருந்த சாம்பல் அவர்கள் கைகள் பட்டதும் அப்படியே சரிந்தது. அப்போது சாந்தியின் கையில் ஏதோ தட்டுப்பட்டது போல உணர்ந்தாள்.

“என்னது? ‘ என்று சாந்தி எடுத்துப் பார்த்தபோது மீனாட்சியும் உற்றுப் பார்த்தாள்.

என்ன ஆச்சரியம் ? கொழுந்து விட்டெரிந்த அந்தக் கொடுந்தீயில் பூமியே கருகி விடும் அந்த உஷ்ணத்தில் காளியம்மாளின் கழுத்தில் தொங்கிய தங்கத்தாலி மட்டும் அந்த வெப்பத்திலும் உருகாமல் அப்படியே இருந்தது.

“எங்களுக்குத் தாலி எடுத்து குடுக்கிறேன்னு சொல்லிட்டு, இப்பிடி ஒன் தாலிய எங்க கையில குடுத்திட்டு பாேயிட்டியே அம்மா ” என்று இருமகள்களும் கதறினார்கள்.

காளியம்மாள் அணிந்திருந்த தாலியின் தங்கம்

“*கிளிச்சிறை* “

****

கஸ்தூரி ராஜா

திரைப்பட இயக்குநர்

****

கிளிச்சிறை அல்ல தமிழ்ச்சிறை ….!

தமிழை இந்தி அபகரித்து விடுமோ ? என அஞ்சிய தமிழனுக்கு ஏமாற்றமே…! இதோ – அமுதினுமினிய தமிழை ஆங்கிலம் அபகரித்துக் கொண்டது..! இனி, இதுதான் தமிழ் விதியோ? இல்லை,தமிழுக்கு இன்னும் உயிர்ப்பு .இருக்கிறது…! இதோ ராஜா செல்லமுத்து அதை நிரூபித்தி ருக்கிறார் தன்னுடைய 2000 வது சிறுகதையான

கிளிச்சிறை மூலமாக.

வாசிக்காமலே வாசித்தது போல் யாேசித்துச் சொல்லவில்லை. வாசித்து அதை நேசித்து உறுதி செய்கிறேன். இது கிளிச்சிறை அல்ல தமிழ்ச்சிறை வாழ்த்துகள் தமிழா…!

இங்ஙனம்,

கஸ்தூரிராஜா

திரைப்பட இயக்குநர்.

––––––––––––––––––

****

கே.பாக்யராஜ்

திரைப்பட இயக்குநர்

****

மண்ணையும் விவசாயத்தையும் கைவிட்டு, விருப்பமே யில்லாமல் வேறு தொழில் செய்து, இரு பெண் பிள்ளை களைக் கரை சேர்த்திடத் தவிக்கும் ஒரு குடும்பத் தலை வனின் பேராசை, நம்பிக்கை, பாேராட்டம், அவனை வார்த்தைக்கு வார்த்தை திட்டித்தீர்க்கும் மனைவியின் பரிதவிப்பு, புலம்பல் என எதார்த்தமான மனிதர்கள், இக்கதையில் அவர்கள் வாழ்க்கையாேடு நம்மைப் பிணைத்து விடுகின்றனர். யார் என்ன செய்தார்கள்? தங்கம் கிடைத்ததா? பிள்ளைகள் சாந்தி, மீனாட்சிக்கு தங்கத்தில் தாலியேறியதா? என பதற வைக்கிறது ராஜா செல்ல முத்துவின் 2000 வது சிறுகதையான “கிளிச்சிறை “.

கே.பாக்யராஜ்

திரைப்பட இயக்குநர்.

–––––––––––

****

இரா.முகுந்தன்

பொதுச்செயலாளர்

தில்லித் தமிழ்ச் சங்கம்.

தில்லி

****

எழுத்தாளர் – திரைப்பட இயக்குநர் ராஜா செல்லமுத்து எழுதிய 2000 வது சிறுகதையான கிளிச்சிறை சமூகத்திற்கு அல்லது குறுகிய வழியில் பொருள் சேர்க்க நினைக்கும் மனிதர்களுக்குச் சாட்டையடி ஆகும். தங்களின் எழுத்துப் பணி மேன்மையுறவும் சிறுகதைப் பயணம் சிறப்புறவும் தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்துகிறது.

இப்படிக்கு,

இரா.முகுந்தன்,

பொதுச்செயலாளர்,

தில்லித் தமிழ்ச்சங்கம்,

தில்லி.

–––––––––––––––

****

சிஎம்ஆர். மணிமொழியன்,

காவல் துணைக் கண்காணிப்பாளர்,

சென்னை.

****

சிந்தனைகளைத் தத்துவங்களோடும் எதார்த்த நடையோடும் நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்த்து தான் சொல்ல விழைந்ததை ஒரே கதையில் நிலைநிறுத்திய தங்களின் பேராற்றலுக்கு வாழ்த்துகள். தங்களின் 2000 வது சிறுகதையான கிளிச்சிறை எளியவர்களின் விடுதலைக் கான ஏக்கப் பார்வை. எரிசாம்பலில் மிஞ்சிய (ஆ) தங்கம்.

சிஎம்ஆர். மணிமொழியன்,

காவல் துணைக் கண்காணிப்பாளர்,

சென்னை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *