செய்திகள்

கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிவடையும்: சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்

சென்னை, பிப்.24-–

கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிவடையும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.

சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று, சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் ரெயில்வே பட்ஜெட்டில் இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள 77 ரெயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. 26-ந்தேதி பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 554 ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இதில், தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், பூங்கா, பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 7 ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயில்களை ரத்து செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது துறை ரீதியாக அவசியமாகிறது. விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் பெருமளவில் பாதிப்படைய மாட்டார்கள்.

சென்னை கடற்கரை -– தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்களில் 5 ரெயில்களை கூடுவாஞ்சேரி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் இரு மார்க்கத்திலும் தலா 5 ரெயில் சேவை விரைவில் நடை முறைப்படுத்தப்படும்.

ரெயில் நிலையங்களில் கழிவறைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யானைக்கவுனி மேம்பாலம் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது, விரைவில் திறக்கப் படும். கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த 6 மாதத்தில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை சிறப்பாகவே உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *