அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, மார்ச் 10–
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, புதிய பேருந்து நிலையப் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இப்பணிகள் தொடர்பாக மாதத்திற்கு 6 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய பேருந்து நிலையம் முதலமைச்சரால் திறந்து வைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டு குமாரவயலூர் அருள்மிகு முருகன் திருக்கோயிலில் பணியமர்த்தம் செய்யப்பட்ட அர்ச்சகர்கள் நியமனம் ரத்து என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ரூ.394 கோடியில்…
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணா தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பஸ்நிலைய கட்டுமான பணிக்காக 393.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வந்தது. கொரோனா காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் வேகமாக நடந்தன. தினந்தோறும் ரூ.1½ லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
209 பஸ்கள், 270 கார்கள்
நிறுத்த வசதி
ஒரே நேரத்தில் 209 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் காத்திருக்கும் இடம், தங்குமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. எஞ்சிய சில பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.