சென்னை, டிச. 1–
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், மின் இணைப்பு பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி இருப்பதால், பொங்கல் பண்டிகைக்குள் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார்.
தலைநகர் சென்னையின் 6 ஆண்டுகால கனவு. மாநகரின் நெருக்கடியை குறைக்க புதிதாக போடப்பட்ட திட்டம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிகள் தாமதமானதால் அடுத்தடுத்து நெருக்கடியை சந்தித்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பொங்கலுக்கு ரெடியாகி விடும்
அமைச்சர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை அவ்வப்போது நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அமைச்சர் முத்துசாமி நேற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை கூறி உள்ளார். பரனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைப் பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மின் இணைப்பு போன்ற சிறிய பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. வரும் பொங்கல் பண்டிகையின் போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.