செய்திகள்

கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜன. 4–

கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரயில்வேவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 20 கோடி நிதி வழங்கியுள்ளது. புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30–ந்தேதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திலிருந்து முதல்கட்டமாக தென் மாவட்ட பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது. பொங்கலுக்கு பிறகு முழு அளவிலான பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரெயில் நிலையம் அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே புறநகர் ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு தரப்பில் தெற்கு ரெயில்வேவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியது.

இந்த நிலையில், ரெயில்வே நிதி கிடைத்து ரெயில் நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியிலிருந்து முதல்கட்டமாக தெற்கு ரெயில்வேவுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகளை முடிக்க தெற்கு ரெயில்வேவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *