அமைச்சர்கள் பேட்டி
சென்னை, பிப்.11–
கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என வதந்தி பரப்பி வருவதாக அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே. சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது முதல் தொடா்ந்து பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
பயணிகளுக்கான வசதிகள் செய்துதரப்படாத நிலையில், அவசர கதியில் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு படிப்படியாக வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வடசென்னை பயணிகள் பாதிக்கப்பட்டதால் அவா்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் செல்லும் 160 பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து வார இறுதி நாட்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்மாவட்டங்களுக்கும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம்.
அந்த வகையில் முகூர்த்த நாள் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:–
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு நேரத்தில் எப்பொழுதுமே குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கின. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே புறப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். நேற்று முன் தினம் வழக்கத்தை விட திருச்சிக்கு 70 பேருந்துகள் கூடுதலாகவே இயக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்திற்கு நள்ளிரவு வரும் பயணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.
வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக பேருந்து இயக்கப்பட்டதன் மூலம் 1.07 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.