‘கிறிஸ்துமஸ்’ பண்டிகையை முன்னிட்டு டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
‘கிறிஸ்துமஸ்’ பண்டிகை மிகுந்த சிறப்பு வாய்ந்தது. உன்னதக் குறிக்கோள் அடிப்படையில் கொண்டாடப் பெற்று வரும் இப்பண்டிகை, உலகிலுள்ள மக்கள் யாவரும் தீய செயல்களைச் செய்து பாவங்களைச் சேர்ப்பதிலிருந்து முற்றிலும் விடுபட்டு, செய்த பாவங்களுக்காக, மனம் வருந்தி, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி மன்னிப்புக்கோரி, திருந்தி நன்நெறியில் வாழ வழிகாட்டியாய் இம்மண்ணில் வந்து உதித்த தேவகுமாரனான இயேசுவின் பிறந்த நாளாகப் பெருமையுறுகிறது.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவான இது, இயேசு பிறந்த நாளிலிருந்து தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் கொண்டாடப்ப் பெற்றும் வருகிறது. தச்சுத் தொழிலாளியான யோசேப்பிற்கும் புனிதவதி மரியாளுக்கும் பரிசுத்த ஆவியால் மாட்டுத் தொழுவம் ஒன்றில் பிறந்த இயேசு, நல்மேய்ப்பராக இருந்து, உலக மக்களைப் பாவங்களிலிருந்து மீட்டெடுத்து நல்வழியில் உய்விக்கச் செய்தார்.
கருணையே வடிவான இயேசு, தமது சீடருக்கும் பிறவகையிலான பொதுமக்களுக்கும் அருளிய உபதேசங்கள் மிகமிக அற்புதமானவை. அன்பு, சகிப்புத்தன்மை, பிறர் செய்யும் குற்றங்களை மன்னிக்கும் மாண்பு, சகோதரத்துவம் ஆகியவையே கிறிஸ்துவ மதத்தின் சாரம். கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் நிகழும் திருப்பலி, பரிசளிப்புகள், குடும்பங்களின் கலந்துரையாடல், அன்புப் பரிமாற்றங்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் நட்டு இல்லங்களை அலங்கரித்தல், குடிகள் அமைத்தல் ஆகியன எவரையும் ஈர்த்து, இன்புற்று நெகிழச் செய்பவையாகும்.
‘கிறிஸ்துமஸ் தாத்தா’விற்குத் தனிச் சிறப்புண்டு. இவரைத் தொன்மை வரலாற்று அடிப்படையில் சாண்டாகிளாஸ் அல்லது புனித நிக்கோலாஸாகக் காண்பர். இந்தத் தாத்தா, குழந்தைகளுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல்நாளான டிசம்பர் மாதம் 24–ந் தேதியே, பல்வேறு பரிசப் பொருள்களை அள்ளி வழங்கி அவர்களோடு சேர்ந்து நடனமாடியும் அவர்களைப் பெரிதும் ஈர்ப்பவராவார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் ‘கேக்’ தயாரிப்பும் சிறப்புப் பெற்ற ஒன்றாகும். கிறிஸ்துமஸ் கேக் நண்பர்கள், உறவினர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோருக்கு இடையே வழங்கப்படும் அன்புப் பரிமாற்றமாகும். ஆக, பல்வேறு கோணங்களில் தனிச்சிறப்புப் பெற்றுவரும் ‘கிறிஸ்துமஸ்’ அன்புடைமை, இரக்கமுடைமை, வாய்மை, நேர்மை, நிதானம், அடக்கமுடைமை, கடும் உழைப்பு, நன்றியுடைமை, சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு நினைவூட்டும் உன்னதப் பெருவிழாவாகத் திகழ்கிறது.
நல்வழி நடப்போம். மனிதம் புனிதம் பெறச் செய்வோம். எங்கும் அமைதியும் சமாதானமும் நிலவச் செய்வோம். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.