செய்திகள்

கிர்கிஸ்தானில் வன்முறை; யாரும் வெளியே வர வேண்டாம்: இந்திய தூதரகம் வேண்டுகோள்

Makkal Kural Official

பிஸ்ஹேக், மே 18–

கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டவர்கள் தாக்கப்பட்டிருப்பதால் அங்கு வாழும் பிற நாட்டவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். யாரும் வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கும் எகிப்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.

இது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:–

கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மிக கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டு அறை எண்: 0555710041 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கண்காணித்து வருகிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *