சிறுகதை

கிருஷ்ணர் முகத்தில் நெய்! | சின்னஞ்சிறுகோபு

நாங்கள் சென்னை புறநகர் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் என்றால், அதாவது நானும் என் மனைவியும்! எங்கள் வயதென்ன என்றுதானே கேட்கிறீர்கள்? எங்கள் இருவருக்குமே வயது அறுபத்தைந்தை நெருங்குகிறது. திருமணமான மகன் டில்லியில் குடும்பத்துடன் இருக்கிறான். மகளோ இங்கே பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் மேடவாக்கத்தில் இருக்கிறாள்.

இன்று காலையில் என் மகளும் மாப்பிள்ளையும் பேரனும் காரில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் எங்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வரவில்லை. எங்கோ நண்பர் வீட்டு திருமணத்திற்கு செல்கிறார்களாம். அதனால் அவர்களது ஐந்து வயது மகனை அதாவது எங்களது பேரனை எங்களிடம் இரண்டு நாட்கள் விட்டு விட்டு செல்ல வந்திருக்கிறார்கள்.

அவர்கள் சென்றதும் எங்கள் பேரன் நவீன் என்னிடம் வந்து, “தாத்தா, உங்களுக்கு COW வரைய தெரியுமா?” என்றான்.

“COWவா? அதாவது பசுமாடுதானே? கொஞ்சம் கொஞ்சம் வரையத் தெரியும்டா!” என்றேன். அவனிடம் போய் படம் வரைய தெரியாது என்று சொல்ல எனக்கு என்னவோ போலிருந்தது.

“எங்க மிஸ் திங்கள் கிழமை ஆன்லைன் கிளாஸில் COW படம் வரைந்து காட்ட சொல்லியிருக்காங்க! வரைந்து கொடு தாத்தா!” என்றான்.

என் மனைவி அவங்க அக்கா வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அக்கா வீடு அதிக தூரத்திலெல்லாம் இல்லை. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு தெருவை தாண்டி மிக அருகேதான் இருக்கிறது.

“இதோ பாருங்க, இவ்வளவு கிட்டேயிருந்தும் அக்காவைப் பார்த்து பத்து நாளாச்சு. நான் நவீனையும் அழைத்துக்கொண்டு செல்கிறேன். நீங்க அவனுக்கு பசுமாடு படம் வரைஞ்சு வையுங்க. மாடா வரைஞ்சு வையுங்க! உங்களை மாதிரி கழுதையா வரைஞ்சு வைக்காதிங்க!” என்று என்னை ஒரு இடி இடித்துவிட்டு பேரனுடன் சென்றாள் என் மனைவி.

‘வருவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும்! ஒரு குட்டித் தூக்கம் போடலாம்’ என்று நினைத்தபோதே, பேரன் பசுமாடு படம் வரைய சொல்லிவிட்டு சென்றிருப்பது ஞாபகத்திற்கு வந்தது.

‘ஐயயோ…உடனே பசுமாடு வரையவேண்டும். இல்லாவிட்டால் அவன் வந்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்வான். என் கிழமும் கூட சேர்ந்துக் கொள்ளும்’ என்று நினைத்தபடி கொஞ்சம் பேப்பர்களையும் கலர் பென்சில்கள், ரப்பர், ஸ்கேல் போன்றவைகளையும் தேடிப்பிடித்து எடுத்து வந்தேன்.

‘பசுமாடா? அதை எப்படி வரைவது? சொல்லப் போனால் எனக்கு படமெல்லாம் வரைய தெரியாது. வரைந்தும் பழக்கமில்லை. பள்ளிக்கூட காலத்திலேயே டிராயிங் வகுப்பில் கத்தரிக்காய் படம் வரையச் சொன்னால், அதை காயத்திரி கன்னம் போல வரைவேன். இப்போது இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு பசுமாடு படம் வரைய வேண்டும் என்றால் எப்படி வரைவேன்?’ என்று பென்சிலை வைத்துக்கொண்டு யோசித்தபோது, சமையலறையில் ஒரு நெய் பாட்டில் மீது பசுமாடு படம் போட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த படத்தைப் பார்த்து வரைந்து விடலாம் என்று தோன்றியது.

அந்த அரைகிலோ நெய் பாட்டிலை எடுக்க சமையலறைக்கு உற்சாகத்துடன் ஓடினேன்!

சமையலறைக்கு சென்று தாவி நெய் பாட்டிலை எடுத்ததுதான் தெரியும். அடுத்த வினாடியே கைநழுவி ‘தொப்’பென்று அந்த நெய் பாட்டில் கீழே விழுந்து, அந்த அரைக்கிலோ நெய்யும், அந்த சமையலறையில் ‘சளக்’கென்று கொட்டிச் சிதறியது. நெய்பாட்டிலும் ஒரு பக்கமாக ‘கடகட’வென்று உருண்டோடி போய் நின்றது.

எனக்கு ‘ஐயோ’வென்று ஆகிவிட்டது. இது எப்படி நடந்தது? மூடி சரியாக மூடாமல் இருந்திருக்குமோ?

அதையெல்லாம் இப்போது ஆராய நேரமில்லை!

இப்போது என்ன செய்வது? என் மனைவி வந்தால் என்னை கொன்னே போட்டுவிடுவாள் ; 300 ரூபாய் நெய்யாயிற்றே! முதலில் இந்த சமையலறையின் தரையை சுத்தம் செய்யவேண்டும். பரபரவென்று வீட்டில் தேவையில்லாத பொருட்கள் கிடக்கும் ரூமுக்கு ஓடோடிச் சென்று, ஒரு பழைய சாக்கை எடுத்துவந்து விதியை நொந்து கொண்டே வேர்க்க விறுவிறுக்க துடைத்தேன். அதன்பிறகும் தரை கொஞ்சம் பிசுபிசுவென்று இருப்பது போலிருந்தது. மறுபடியும் ஒரு குப்பை துணியை எடுத்து வந்து, தரையில் கோலமாவையெல்லாம் தூவி துடைத்தேன். இப்போதுதான் சமையலறை தரை பழையபடி இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதன்பிறகு அந்த துடைத்த சாக்கையும் துணியையும் கொண்டுபோய் தெருவிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். இதற்கே அரைமணி நேரம் ஆகிவிட்டது!

சரி, இப்ப நெய்க்கு என்ன செய்வது? சரி, இதை போல வேறு ஒரு நெய் பாட்டில் வாங்கி வைத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்! படம் வரைவதைப் பற்றியெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று, 500 ரூபாயை எடுத்துக்கொண்டு அண்ணாச்சி கடைக்கு பறந்தோடினேன்!

நான் எப்போதும் மளிகைப் பொருட்கள் வாங்கும் அண்ணாச்சி கடைக்கு சென்றபோது, என் கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக அப்போது கடையில் யாருமில்லை! சொல்லப்போனால் அப்போதுதான் ஒருவர் ஏதோ ஒரு பொருளை வாங்கிக்கொண்டு திரும்பிப் போய் கொண்டிருந்தார்.

“நெய்…வேண்டும் அண்ணாச்சி…. நெய் வேண்டும்!” என்றேன் பதற்றத்துடன்!

“அதற்கு ஏன் இப்படி பதற்றப்படுறீங்க? நெய் எவ்வளவு வேண்டும்? 100 கிராமா? அல்லது 250, 500 கிராமா? இல்லே ஒரு கிலோவா?” என்றார் அந்த கடைக்கார அண்ணாச்சி.

“அரை கிலோதான்!” என்றவுடன், அவர் ஒரு நெய் பாட்டிலை எடுத்து என் முன் வைத்தார். ஆனால், அந்த நெய் பாட்டிலில் பசுமாடு படம் இல்லை!

“இதில்லே அண்ணாச்சி! நாங்க வழக்கமா வாங்குற நெய் பாட்டிலில் பசுமாடு படம் போட்டிருக்கும்!” என்றேன் பரிதாபமாக!

“இந்தாங்க!” என்றபடி அவர் இன்னொரு நெய் பாட்டிலை எடுத்து வந்து வைத்தார்.

அந்த நெய் பாட்டிலில் பசு மாட்டின் முகம் மட்டுமே போட்டிருந்தது!

“இந்த கம்பெனி நெய் இல்லை. நாங்க வழக்கமாக வாங்கிற நெய் பாட்டிலில் பசுமாடு நின்றுக்கொண்டிருப்பது போல படம் போட்டிருக்கும்! அந்த நெய் கம்பெனியின் பெயர் மறந்துப் போச்சு! அந்த மாடு மட்டும்தான் ஞாபகம் இருக்கு! ” என்றேன்.

அவர் இன்னும் இரண்டு நெய் பாட்டில்களை எடுத்து வந்து வைத்தார். அந்த நெய் பாட்டில்களில் பசுமாடு நின்றுக் கொண்டிருப்பது போல படம் போட்டிருந்தது. ஆனால், அந்த நெய் பாட்டிலிருந்த மாடுகள் எங்க வீட்டிலிருக்கும் மாடு இல்லை!

“இதில்லை அண்ணாச்சி! எங்க வீட்டில் நெய் பாட்டிலில் இருக்கும் பசுமாடு அரக்கு கலரில் கொஞ்சம் சிரித்த முகத்துடன் இருந்தது. பாட்டிலும் மஞ்சள் கலரில் இருந்தது!” என்றேன்.

அண்ணாச்சிக்கு ஒரே ஆச்சரியம்! “என்ன சார், இது எல்லாமே மிகவும் தரமான நெய்தான். படத்தில் என்ன சார் இருக்கு! பச்ச புள்ள மாதிரி கேட்கிறீங்க!” என்றார்.

நான் வீட்டில் நெய் பாட்டிலை எடுத்தது, அது தவறி விழுந்து அவ்வளவு நெய்யும் கீழே கொட்டியது, மனைவி வருவதற்குள் அச்சு அசலாக அதைபோல ஒரு நெய் பாட்டிலை வாங்கி, அந்த இடத்தில் வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பது ஆகியவற்றை அண்ணாச்சியிடம் விரிவாக விரைவாக சொல்லி முடித்தேன்.

அவர் பரிதாப பட்டுக்கொண்டே, “கவலைப் படாதிங்க! இதில் ஏதாவது ஒரு அரை கிலோ நெய் பாட்டிலை வாங்கிட்டு போங்க! இதிலிருக்கும் நெய்யை ஜாக்கிரதையாக உங்க வீட்டிலே இருக்கும் அந்த நெய்பாட்டிலில் ஊற்றி, அந்த பாட்டிலை மூடி துடைத்து, அது இருந்த இடத்தில் வைத்து விடுங்கள்! பிறகு இந்த வெற்றுப் பாட்டிலை ஞாபகமாக உடனடியாக தெருவிலிருக்கும் குப்பைத் தொட்டியில் வீசிவிடுங்கள்! பிரச்சனை தீர்ந்து விடும்!” என்றார்.

“என்ன அண்ணாச்சி! என் மனைவி தொடர்ந்து அந்த நெய்யைதான் எப்போதும் வாங்குகிறாள். நெய் மாறியிருப்பதை அந்த பிசாசு, அதன் வாசனையிலிருந்தே கண்டு பிடித்து விடும்!” என்றேன்.

அப்போதுதான் அந்த கடையில் மாட்டியிருந்த காலண்டர் என் கண்ணில் பட்டது! அந்த காலண்டரில் எங்கள் வீட்டு நெய் பாட்டிலின் மீதிருந்த அதே பசுமாட்டின் படத்துடன் M.K.R. நெய் என்று போட்டிருந்தது!

“அண்ணாச்சி, இதோ அந்த காலண்டரில் போட்டிருக்கும் M.K.R. நெய்தான் எங்க வீட்டில் இருந்ததது!” என்றேன்.

“ஐயயோ….அது தீர்ந்துப் போச்சே! இனி நாளைக்குதான் வரும்! ” என்றார் அந்த கடைக்காரர்

வேறு கடையில் கேட்டுப் பார்க்கலாமென்றால் அருகே மளிகை கடை வேறு எதுவுமில்லை. அதோடு இதே மாடுதான் வேண்டுமென்று தேடி ஓட எனக்கு இப்போது நேரமும் இல்லை! என் மனைவியும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாள்!

அப்போது வியாபார தந்திரங்கள் நிறைந்த அண்ணாச்சி முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம்! “இதே M.K.R. கம்பெனியின் வெண்ணெய் இருக்கு! அதில் அரைக்கிலோ பாக்கெட்டை வாங்கிட்டுப் போங்க! வீட்டிலே வழக்கமாக நெய் உருக்கும் வாணலியை எடுத்து அதில் போட்டு, அதில் வைத்து நெய்யாக காய்ச்சி, அந்த பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். நெய் வித்தியாசத்தை அவங்களாலே கண்டுபிடிக்க முடியாது!” என்றார்.

எனக்கென்னவோ, அது கையை தலைக்குப் பின்னால் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருந்தாலும் கொஞ்சம் சரியாகவும் தெரிந்தது. நான் வெண்ணையை உருக்கி நெய் தயாரிப்பதை பார்த்திருக்கிறேன். நெய் உருக பத்து நிமிடங்கள்தான் ஆகும். அதன்பிறகு அது சூடு ஆறுவதற்கு அரைமணி நேரம். பிறகு அதை அந்த பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு, வாணலியை நன்றாக தண்ணீரில் விளக்கி வைத்துவிட்டு, இந்த வெண்ணைய்கான அட்டைப் பெட்டியையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்! பிறகு CBIயே வந்தாலும் என் தில்லுமுல்லு வேலைகளை கண்டுபிடிக்க முடியாது!

அப்புறமென்ன, அந்த வெண்ணெய் பாக்கெட்டுடன் வீட்டுக்கு வேகமாக வந்து, வெண்ணையை வாணலியில் போட்டு நெய்யாக உருக்கி, பிறகு சூடு ஆறும்வரை எங்கே அவள் வந்து விடுவாளோ என்று பதைபதைப்புடன் காத்திருந்து, சூடு ஆறியபிறகு அதை அந்த நெய் பாட்டிலில் ஜாக்கிரதையாக ஊற்றி அதன் இடத்தில் வைத்துவிட்டு, பிறகு அந்த வாணலியை ‘விம்’ போட்டு கழுவி வைத்துவிட்டு, அந்த வெண்ணெய் அட்டைப் பெட்டியையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, ‘அப்பாடா’யென்று உட்கார்ந்தபோது, ‘போதும்டா சாமி’யென்று தோன்றியது.

‘மனைவியிடம் ஒரு பொய்யை மறைக்க இவ்வளவு வேலையா! அடக் கடவுளே, எத்தனை வயசானாலும் பெண்டாட்டிக்கிட்டே இருக்கிற பயம் மட்டும் போக மாட்டேங்குதே’ என்று நினைத்தபடி நான் கண்ணை மூடிக்கொண்டு ஈஸிசேரில் படுத்திருந்தேன்.

அப்போதுதான் மனைவியும் பேரனும் வந்தார்கள். பேரனின் கையில் ஒரு காகிதம் இருந்தது!

“தாத்தா….COW படத்தை அங்கே சித்தியே வரைஞ்சு கொடுத்துட்டாங்க!” என்றான்.

‘அட ராமா, இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால், நான் சும்மாவே இருந்திருப்பேனே! இவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டாமே’ யென்று தோன்றியது.

சமையலறைக்கு சென்ற மனைவி சிறிது நேரத்திலேயே, “இங்கே என்ன வேலை பண்ணியிருக்கிங்க?” என்று ஒரு அதட்டல் போட்டாள்!

எனக்கு தூக்கிவாறிப் போட்டது!

“நெய் பாட்டிலை எடுத்து கீழேப்போட்டு நெய்யை தரையில் கொட்டிவிட்டு, பிறகு கடைக்குப் போய் வெண்ணையை வாங்கிட்டுவந்து உருக்கி, பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு, எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்திருக்கிங்க!” என்று கத்தினாள்.

‘ஐயோ, எப்படி என் தில்லுமுல்லுகளையெல்லாம் ஒரே நிமிஷத்தில் இந்த ராட்சஸி கண்டுபிடித்தாள்?’ என்று நான் திகைத்தபடி, சுரத்தில்லாமல் “என்ன சொல்றே?” என்றேன். உடம்பு பயத்தில் லேசாக நடுங்குவது போலிருந்தது!

“என்ன சொல்றேனா? தரையெல்லாம் மினு மினுப்பாக சுத்தமாக இருக்கு! சுவரில் இருக்கும் கிருஷ்ணர் படத்தின் முகத்தில் நெய் சிதறி ஒட்டியிருக்கு! நெய் பாட்டிலைத் தொட்டால் கதகதப்பாக சூடாயிருக்கு! வாணலி பாத்திரமோ கழுவி ஈரமாயிருக்கு! சமையலறை முழுவதும் நெய் வாசனையாயிருக்கு! அதோடு நம் வீட்டுக்கு எதிரே குப்பைத்தொட்டியின் மேல் புதிதாக ஒரு காலியான வெண்ணெய் அட்டைப்பெட்டியை இப்போது பார்த்ததும் ஞாபகத்திற்கு வருகிறது. நெய்யை தரையில் போட்டு உடைத்துவிட்டு, தரையையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு, வேறு வெண்ணையை வாங்கிட்டுவந்து, உருக்கி அதே பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு, ‘இந்த பூனையும் நெய் குடிக்குமா?’ என்பதுபோல உட்கார்ந்திருக்கிங்க!” என்று சத்தம் போட்டாள்.

என் எல்லா வேலைகளும் ஒரே நிமிடத்தில் அம்பலமானதை நினைத்து நான் பரிதாபமாக உட்கார்ந்திருந்தேன்.

அப்போது தூரத்தில் ஒரு பசுமாடு ‘அம்மா’ என்று கத்துவது ஜன்னல் வழியாக என் காதில் தெளிவாக கேட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *