செய்திகள்

கிருஷ்ணகிரி பெண்ணையாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை

சென்னை, பிப்.12

கிருஷ்ணகிரி பெண்ணையாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) கலந்துகொண்டு பேசினார்.

பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அவர் வைத்த கோரிக்கைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உறுப்பினர் தங்களுடைய பகுதியிலே கால்வாய் அமைக்க வேண்டும் என்று இன்றைக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார். ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவிலே நாங்கள் அறிவித்தோம். அந்த அறிவிப்பின்படி, எண்ணெய்கோல் புதூர் அணைக்கட்டு பெண்ணையாற்றில் வரும் கூடுதல் வெள்ளநீரை, இந்த அணைக்கட்டின் இடதுபுறம் மற்றும் வலதுபுறத்தில் புதிய வாய்க்கால்கள் அமைத்து, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு விவசாயித்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூபாய் 72 கோடி செலவில் நிலம் கையகப்படுத்த 1.2.2018 அன்று அரசாணை வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகவே, அங்கே இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையை ஏற்று, உங்களுடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற விவசாய பெருமக்கள், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று, இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றோம்.

நீங்கள் சில பகுதிகள் விடுபட்டதாக சொன்னீர்கள். அந்தப் பகுதியும் ஆய்வு செய்யப்படும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அதுமட்டுமல்லாமல், உங்களுடைய தொகுதியிலே பெண்ணையாற்றின் குறுக்கே போச்சம்பள்ளி தாலுகா, அரசம்பட்டி கிராமத்திலே ரூபாய் 8.5 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, பெண்ணையாற்றின் குறுக்கே பெண்டரஹள்ளி கிராமத்தில் ரூபாய் 8.5 கோடி செலவில் தடுப்ப ணை கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, அங்கே இருக்கின்ற விவசாய பெருமக்கள் உங்களைப் போல் அரசியலில் இருக்கின்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாம் ஏற்று, இந்த தடுப்பணையும் அம்மாவுடைய அரசால் கட்டித்தரப்படும். ஆகவே, அம்மாவுடைய அரசு எப்பொழுதும் விவசாயிகள் பக்கம் இருக்கும் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *