கார் விபத்தில் தந்தையும் உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி, ஆக. 23–
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி பயிற்சியாளருமான சிவராமன் (30) என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். மேலும், 13 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பான புகாரில் சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை போலீசார் நேற்று பதிந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கிருஷ்ணகிரியில் நேற்று விசாரணையை தொடங்கினர். முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர் கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை கூறியதாவது: “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், கடந்த ஜூலை 11-ம் தேதி குடும்பப் பிரச்சினை காரணமாக, எலிக்கு வைக்கப்படும் பசையைத் தின்று, தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்து அழைத்து வரும்போது, தப்பியோட முயன்றபோது அவரது கால் முறிந்தது. தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். அப்போது, கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேறு ஒரு தனியார் பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயஸ்ரீ முரளிதரன்
சமூக நலத்துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஐ.ஜி. பவானீஸ்வரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கிருஷ்ணகிரி துயர சம்பவம் தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி.ஆகியோர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டோர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடும் தண்டனை பெற்றுத் தரப்படும். மேலும், பள்ளி செயல்பாடு குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எந்தப் பள்ளியிலும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக இக்குழு அரசுக்குப் பரிந்துரை செய்யும். இதுபோன்ற சம்பவங்களை பெற்றோர் தைரியமாக முன்வந்து 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கத் தயங்குவதால்தான், சிலர் இதுபோன்ற தவறுகளில் அச்சமின்றி ஈடுபடுகின்றனர்.
பள்ளிகளில் நடக்கும் எந்தப் பயிற்சி வகுப்பாக இருந்தாலும், கட்டாயம் ஆசிரியை ஒருவர் உடனிருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வோம். குழந்தைகள் தொடர்புடைய வழக்குகளில் குழந்தைகளின் பெயர், குடும்பம், பள்ளி உள்ளிட்ட தகவலை வெளியிட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள அரசு பயணியர் மாளிகைக்கு, இரவு 7 மணிக்கு மேல் வந்துபுகார் தெரிவிக்கலாம். அவர்களது பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே, அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாவறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையும் உயிரிழப்பு:
சிவராமனின் தந்தை அசோக்குமார் (61). இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினத்தில் இருந்து திம்மாபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மது போதையில் வாகனத்தை ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் இருந்து வந்த காவேரிப்பட்டினம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவராமனின் குடும்பம்:
காவேரிப்பட்டினம் திம்மாபுரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சிவராமன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவராமனுடன் உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளனர்.