* கார்கள் அடித்து செல்லப்பட்டன
* வீடுகளுக்குள் வெள்ளம்
கிருஷ்ணகிரி, டிச.2–
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடிய, விடிய பெய்த கனமழையால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளதால் வெள்ளக்காடானது. ஊத்தங்கரையில் 16 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்ஜல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது, மெதுவாக கடந்ததால் ஒரே நாளில் புதுச்சேரியில் 48 செ.மீ. மழை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீ. மழையும் கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்யத் தொடங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து இன்று காலை வரை இடைவிடாத மழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன
ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், ஊத்தங்கரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளது. ஊத்தங்கரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரி் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார், மினிவேன்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
வீடுகளுக்குள் தண்ணீர்
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், கனமழை தொடர்பாக தாலுகா அளவில் துணை ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை நீர் நிலை உள்ள பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாழ்வான பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.
இதே போல் போச்சம்பள்ளியில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. போச்சம்பள்ளி அருகே உள்ள கோணணூர் ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் வெளியேறி ஊருக்குள் வெள்ளப்பெருக்கெடுத்தால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரியின் உபரிநீர் போச்சம்பள்ளி காவல் நிலையம், 4 சாலையில் உள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது. மேலும், போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி, திருப்பத்தூர், சிப்காட் செல்லும் 3 சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஏரி குளங்கள் நிரம்பின
தொப்படிகுப்பம் பழங்குடியின காலனியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்டவர்களை வருவாய்த்துறை அலுவலர்கள் மீட்டு, வெப்பாலம்பட்டி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்களை அலுவலர்கள் மீட்டு, அந்தந்த மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 16 மணி நேரமாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.