கிருஷ்ணகிரி, செப். 3–
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கதில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. அந்த முகாமில் 8-ம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட 11 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 23-ந் தேதி இறந்தார். போலீஸ் விசாரணையில் சிவராமன் கிருஷ்ணகிரி அருகே மேலும் ஒரு பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் போலி முகாம் நடத்தி 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர் வினோதினியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். ஜனவரி மாதம் தனியார் பள்ளியில் நடந்த முகாமில் மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை தொடர்பான வழக்கில் பள்ளியின் பெண் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.