செய்திகள்

கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி விரைவில் அமையும்

சென்னை, பிப். 12

கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கிருஷ்ணகிரி தொகுதி தி.மு.க. உறுப்பினர் செங்குட்டுவன் கேள்வி எழுப்பினார். கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய 6 வழிச்சாலையில் மருத்துவ கல்லூரி அமைக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.

அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டது. இந்த ஆண்ட கரூரில் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனை தற்போது அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அங்கு சிடி ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் எம்.ஆர். ஸ்கேன் வழங்கப்பட இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி சூலூர் பகுதி அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரம் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்களுடன் செயல்படும் ‘டிராமா கேர்’ என்ற விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய 6 வழிச்சாலையில் அரசின் கொள்கை முடிவுப்படி மருத்துவ கல்லூரி அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் துணை கேள்வி ஒன்றை எழுப்பி, பெரம்பலூரில் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி எப்போது துவக்கப்படும் என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அரசின் கொள்கை முடிவுப்படி அங்கும் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

காந்தி ஆசிரமம்

அதனை தொடர்ந்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி கேள்வி ஒன்றை எழுப்பினார். திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்தை புதுப்பிக்க அரசு முன் வருமா? என்றார்.

அதற்கு பதில் அளித்த கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கூறும்போது, தமிழ்நாட்டில் இயங்கி வரும் 66 சர்வோதயா சங்கங்களுக்கும் வருடந்தோறும் உற்பத்தி தொகை மீது 20 சதவீத வணிக அபிவிருத்தி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரம சர்வோதயா சங்கத்தை புதுப்பிக்க வேண்டிய நிலை இல்லை என்று பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *