செய்திகள்

‘கிரீமியா குண்டுவெடிப்பில் 6 ரஷ்ய விமானங்கள் சேதம்: உக்ரைன் தகவல்

கீவ், ஆக. 12–

கிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷ்ய விமான படை தளத்தில் குண்டுகள் வெடித்ததில் 6 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:–

கிரீமியாவிலுள்ள சாகி விமான படை தளத்தில் குண்டுகள் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமான தளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு பாழாகியுள்ளது. குண்டுகள் வெடித்தபோது, அந்த விமான தளத்தில் போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருந்தன.

அந்தச் சம்பவத்தில், அங்கிருந்த 6 ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்தனர்.

இது தொடா்பாக ‘பிளானட் லேப் பிபிசி’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், சாகி விமான நிலையத்தில் சுமார் 2 கி.மீ. சுற்றளவு புல்வெளி நிலம் எரிந்துபோயிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், விமான தள ஓடுபாதை அருகே காணப்படும் பள்ளங்கள், அங்கு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளதைக் காட்டுகின்றன.

இருந்தாலும், 2 விமான ஓடுபாதைகள் சேதமடையாமல் பயன்படுத்துவதற்கு ஏற்றதைப் போல் காட்சியளிக்கின்றன.

குண்டுவெடிப்புக்கு முன்னதாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அங்கிருந்த பல போா் விமானங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இருந்தாலும், அந்தச் சம்பவங்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பெரும்பாலும் மௌனம் காத்து வருகின்றனர். அதைப் போலவே கிரீமியா குண்டு வெடிப்பு குறித்தும் உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

அது உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் என்பது உறுதியானால், 2014-ஆம் ஆண்டில் கிரீமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்குப் பிறகு அங்கு உக்ரைன் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இருக்கும். தங்களால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்யா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது குண்டுகள் வீசப்படும் எனவும், அதில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலில், கிரீமியாவிலுள்ள ரஷ்ய விமான தளத்தில் குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *