மும்பை, ஜூலை 19–
கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா – நடாஷா தம்பதி தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு செர்பிய நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஹர்திக் மற்றும் நடாஷா இருவருமே மௌனம் காத்து வந்த நிலையில், நடாஷா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியா என்ற பெயரை நீக்கியதும் சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து இருந்த புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்ட செயல்களால் இவர்களது விவாகரத்து ஏறக்குறைய உறுதியானது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய விவாகரத்து முடிவை ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஹர்திக் -நடாஷா இருவரும் கூட்டாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது மிகவும் கடினமான முடிவு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவை தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மகன் அகஸ்தியாவின் எதிர்காலத்திற்கு இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கடினமான நேரத்தில் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் தெரிவித்துள்ளனர்.