தலையங்கம்
இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த இந்திய பிரீமியர் லீக் (IPL) முறைமை, மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) வாயிலாக பெண் வீராங்கனைகளுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த முறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் ரவுண்டரான கமலினி மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பெங்களூருவில் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற WPL ஏலத்தில் கமலினியின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. ஆரம்பத்தில் 10 லட்ச ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகை, அந்த போட்டியின் காரணமாக ரூ.1.60 கோடியை எட்டியது.
மகள் கமலினியின் சாதனைகள் அவரது பெற்றோர் குணாளன் – சரண்யா தம்பதியிக்கு தந்து வரும் ஆனந்தத்திற்கு எல்லை ஏது?
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கமலினி, பொருளாதார ரீதியில் சவால்களால் நிறைந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை குணாளன் லாரி உரிமையாளராக இருந்தாலும் கல்லூரி காலத்திலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். அதனால் தனது மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க ஆரம்பித்த அவர், அச்சமயம் மகள் கமலினியின் திறமையை கவனித்தார்.
கிரிக்கெட்டில் முன்னேறிய கமலினி, 12 வயதிலேயே தந்தையின் வழிகாட்டுதலால் விளையாடத் தொடங்கினார். மதுரையில் சீரான பயிற்சி வசதி இல்லாததால் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அங்கு சென்னையின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் கமலினி நான்கு ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டார்.
நாட்டின் பல்வேறு டோர்னமெண்ட்களில் கமலினி தன் முத்திரையை பதிக்க தவறிதியதில்லை. 2021ல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய டோர்னமெண்டில் அதிக ரன்கள் குவித்து சாம்பியன் பட்டத்தை நெருங்கினார். அதன் பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் இரண்டாம் இடத்தில் திகழ்ந்து கவனம் பெற்றார்.
தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடி வருகிறார். அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போட்டியில் கமலினி ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற உதவினார்.
கமலினியின் சாதனை, அவரது பெற்றோரின் தியாகத்தையும் பெண்களின் திறமையையும் அடையாளப்படுத்தி சமூக மாற்றத்தையும் காட்டுகிறது. கிரிக்கெட்டில் பெண் குழந்தைகளின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்ததன் உதாரணமாக கமலினி விளங்குகிறார்.
“பெண் குழந்தையை கிரிக்கெட் விளையாட அனுப்பியதற்காக என்னுடைய பெற்றோர் மற்றும் சொந்த பந்தங்களின் பயங்களையும் எதிர்ப்பையும் மீறியே அவளின் கனவுக்கும் திறமைக்கும் ஊக்கம் தந்து கமலினியை கிரிக்கெட் விளையாடுவதற்கு துணைநின்றோம்.
இன்று அவர் சாதித்து காட்டியுள்ளார்” என்று கூறி கமலினியின் தாய் சரண்யா பூரிக்கிறார்.
மகளிர் பிரீமியர் லீக் மூலம் கமலினி மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. “மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையை வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளோம்” என்ற அவரது தாயின் வார்த்தைகள், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளின் எதிர்கால வெற்றிக்கான அடிப்படையைக் காட்டுகிறது.
கமலினியின் கதை, கிரிக்கெட்டின் பின்புலத்தில் இருந்து சாதிக்க முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது. கிரிக்கெட்டின் தனி மேடையில் தனது திறமையை நிரூபித்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார்.