மதன்குமார் தனது மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தைப் பற்றி சிறு வயது முதலே அவனது அப்பா கோவிந்தனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொந்த கிராமத்துக்கு சென்று வருவார். அவனது அப்பா கோவிந்தன் எங்கள் மூதாதையர் நிலங்களை எல்லாம் நான் விற்கவில்லை. அங்குள்ள ஒருவர் மூலம் விவசாயம் செய்து பாதுகாத்து வருகிறேன் என்பார்.
கோவிந்தன் வேலை நிமித்தமாக வெளியூர் வந்தது தங்கி விட்டதால் அவருக்கு கிராம வாழ்க்கைப் பயணம் அற்றுப் போனது. கோவிந்தன் மதன் குமாரைப் பார்த்து நானே அந்த கிராமத்தை விட்டுவிட்டு வந்து விட்டேன்; உனக்கு எதற்கு அது என்றார்.
நீயோ தற்போது தொழிலதிபர். உனக்கு வேலை செய்யவே நேரம் பத்தாது . அங்கு உனக்கு யாரைத் தெரியும் என்றார். மதன் கிராமத்தில்உள்ள மக்கள் நம் முன்னோர்கள் பெயர்களை அவர்கள் இன்றும் ஞாபகம் வைத்து கூறுகிறார்களே அது போதாதா என்றார்.
மதன்குமாருக்கு தனது கம்பெனிக்கு நிறைய ஆர்டர்கள் வந்ததால் அதிக ஆட்கள் வேலைக்குத் தேவைப் பட்டார்கள். விளம்பரம் கொடுத்து ஆட்களை தேர்ந்தெடுக்கலாமென அப்பா கூற, சற்று யோசித்தவனாய் என்னிடம் விட்டு விடுங்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்த திறமை மற்றும் நம்பிக்கையானவர் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.
கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தார் மதன் குமார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாகனத்தில் தனது நண்பனுடன் மதன்குமார் புறப்பட்டார். நேரே கிராமத்திற்குச் சென்றார். நிறைய பழங்கள், இனிப்புகள் மற்றும் கார வகைகளை வாங்கி அடுக்கிக் கொண்டார்.
நண்பன் எங்கே என்று கேட்க, சொல்லுகிறேன் என்றார். வாகனம் ஒரு கிராமத்திற்குள் நுழைய நண்பன் இது தான் உனது கிராமமா என்றார் .
ஊருக்குள் வந்த மதன்குமாரை ஊர்ப் பெரியவர்கள் வாங்க தம்பி, நலமா எல்லோரும் என்றார்கள்.
மதனகுமார் வாங்கி வந்த உணவு வகைகளை அங்குள்ள நன்கு பழக்கமான ஒருவரிடம் தந்து ஊரிலுள்ள பிள்ளைகளுக்கு தருமாறு கூறினார்.
இதற்குள் செய்தியறிந்து வந்த சிறார்களிடம் மதன்குமார் தான்கொண்டு வந்ததை பகிர்ந்து வழங்கினார்.
பின் கிராமத்தில் படித்து முடித்துள்ள வேலையில்லாத இளைஞர்களை பார்க்க வேண்டும் என்றார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த பதினைந்து பேர்களில் பத்து பேரை தேர்ந்தெடுத்து தனது கம்பெனியில் வேலை தருகிறேன் என்றார்.
தங்கும் வசதி, உணவு இலவசம் என்றார். மாத சம்பளம் அவர்கள் தகுதிற்கேற்ப வழங்கப்படும் என்றார்.
அப்போது அங்கு வந்த கைலாசம் மாத சம்பளமும் கூறிவிட்டால் அவர்கள் பெற்றோரும் நிம்மதியடைவார்கள் என்றார்.
நீங்கள் இவர்கள் உழைப்பினால் லாபம் அடையத் தானே போகின்றீர்கள் என்றார். உடனே ஊர்த் தலைவர் இவரும் நமது கிராமத்து ஆள் தானே என்றார்.
கைலாசம் உறவு வேறு. தொழில் வேறு என்றார்.
ஊர்ப் பெரியவர்கள் சற்று கலக்கமடைந்தாலும் மதன் குமார் கைலாசம் என்னுடன் அமருங்கள். அவர்கள் தகுதிக்கேற்ப சம்பளம் நியமித்து விடலாமெனக் கூறி அவர்கள் திருப்திப் படும் வகையில் செய்தான் மதன்குமார்.
கைலாசம் சற்று தலையை ஆட்டி விட்டு அழைத்த மீதமுள்ளவர்கள் ஏமாறுவார்களே என்றார்.
மதன்குமார் அவர்களுக்கு மூன்று மாதம் பயிற்சி தந்து அவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி திடீரென அவர்களை வேலை விட்டு நிறுத்தக் கூடாதெனக் கூறினார்,
எனது மக்கள் அவர்கள். அவர்களைக் கலங்க விடமாட்டேன் என்றார் மதன் குமார்.
பயிற்சிக் காலம் தானே என அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது .
அவர்களுக்கும் தங்கும் இடம், உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும். அவர்கள் மானியத் தொகையையும் கூறுங்கள் என்றார் கைலாசம்.
மதன்குமார் பயிற்சிக் காலத் தொகையை கூறியதும் கைலாசம் சற்று யோசிக்க அங்குள்ள இளைஞர்கள் சரியெனக் கூறினர்.
கைலாசம் பயிற்சி முடிந்ததும் அவர்களும் உங்கள் கம்பெனி தொழிலாளர்கள் தானே என்றார்.
மதன்குமார் ஆமாம் என்றார்.
மனதிற்குள் கைலாசம் ஏன் இப்படி கேட்கிறார். அவர் மண் நேசம் ஆழமாக உள்ளதே என்று நினைத்தான் மதன்குமார். மதனகுமார் நண்பன் மதி ‘‘ இவர்கள் எப்படி நாம் எதிர்பார்த்தபடி இருப்பார்கள். யார் கற்றுக் கொடுப்பார்கள் என்றான்.
அது எனது வேலை. நான் எப்படி செய்கிறேன் என்று பார் என்றான் மதனகுமார்.
வேலைக்கு எல்லோரையும் அடுத்த வாரம் வாருங்கள். நான் வேன் அனுப்புகிறேன் என்றார் மதன்குமார்.
எல்லோரிடமும் விடைபெற்று நண்பனுடன் கிளம்பினான் மதன்குமார்.
அவன் சென்றதும் ஊர்ப் பெரியவர்கள் கைலாசத்தைப் பார்க்க, கைலாசம் அவன் நிறைய சம்பாதிக்கப் போகிறான் பாருங்கள். நம் இளைஞர்கள் ரத்தம் உறிஞ்சப் படப் போகிறது என்றார்.
எப்படிச் செல்கிறது என்று பார்போம் என்று கூறி கைலாசம் கிளம்ப, ஊர்ப் பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நல்லது நடக்குமென நம்புவோம் என்றார்கள்.
அடுத்த ஆறு மாதத்தில் ஊர்த்திருவிழாவிற்காக ஒரு வாரம் விடுமுறையில் வந்த இளைஞர்கள் எங்களை நல்ல முறையில் நடத்துகிறார் என்றார்கள்.
கைலாசம் அவன் கம்பெனி லாபம் உயர்ந்திருக்கும் உங்களால் என்றார். ஒரு வருடம் ஆனதும் சம்பள உயர்வு தர வேண்டும். விட்டு விடாதீர்கள் என்றார். ஆமாம் நீங்கள் கூறுவது சரியே என்றார்கள்.
ஊர்த்திருவிழா தேரோட்டத்திற்கு தனது அப்பா, அம்மா, மனைவி, மகன் மற்றும் மகளுடன் வந்தார் மதன்குமார். அவன் புதுப்பித்த மூதாதையர் வீட்டில் வந்து தங்கினார்கள். திருவிழா முடிந்ததும் கைலாசம் மற்றும் ஊர்ப் பெரியவர்களை தன் வீட்டிற்கு அழைத்தான் மதன்குமார். இந்த கிராமத்தில் ஒரு ஆலை திறக்கப் போவதாய் அறிவித்தார். அதில் பணியாளர் அனைவரும் இந்த ஊர் பெண்களே என்றார்.
ஊர்ப் பெரியவர்கள் மகிழ்வாய் நல்லது எனக் கூறினர்.
அவ்வேளையில் கைலாசம் ,‘‘கிராம மக்களின் ரத்தத்தை மொத்தமாகவே உறிஞ்ச முடிவு செய்துள்ளாயா ? ’’என்றார். மேலும் உன் வசதிக்காகத் தான் சில மேம்பட்ட வசதிகளை கிராமத்தில் செய்தாயா? என்றார் கைலாசம்,
அப்போது கைலாசம் சார் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்றார்.
இந்த ஆலை கிராம முன்னேற்றத்திற்கு எவ்வளவு தூரம் உதவும் என்றார் கைலாசம். அப்போது மதன்குமார் கைலாசம் அவர்களே, இந்த ஆலையின் மூலம் வரும் வருமானம் மொத்தமும் இந்த கிராம அபிவிருத்திக்கே செலவிடப்படும் என்றார்.
கைலாசம் இதற்கு எழுத்து மூலம் தர முடியுமா? ஊர் மக்கள்அறிய முடியுமா? என்றார்.
மதன்குமார், ‘‘ நீங்களே கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் ,’’என்றார்.
அடுத்து கைலாசம் பேசும் முன், கோவிந்தன் பொறியியல் படித்த கைலாசம் மகள் வாசவியே ஆரம்பிக்கும் ஆலையின் பொறுப்பேற்கட்டும். அந்த மகளுக்கு மதன் குமார் மகனையே திருமணம் செய்து வைத்து விடலாம் என்றார்.
கைலாசம் என்ன சம்மதமா? என்று கேட்டார்.
அவர் மதனகுமார் மகன் இந்த கிராமத்தில் இருந்து கொண்டு ஆலை நிர்வாகம் கவனிப்பாரா என்றார் கைலாசம்.
மதன்குமார் ஆமாம் என்றார்.
கைலாசம் ‘‘எனக்கும் இந்த சம்பந்தத்தில் விருப்பம்
தான் ’’என்றார்.
அப்போது ஊர்ப்பெரியவர்கள் மதன்குமார் கிராம நேசம் போற்றத் தக்கது என்றார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மெல்லிய குரலில் மதன்குமார் எப்படி கைலாசத்தை வளைத்துப் போட்டு விட்டார் பாருங்கள் என்றார்.
மேலும் கணக்குப் பண்ணுவதிலும் காயை நகர்த்துவதிலும் தொழிலதிபர்கள் குறியாக இருப்பார்கள் என்பது நிருபணமாகி உள்ளது என்றார்.
அவர்களுக்கு கேள்வி கேட்பவர்கள் என்றாலே அலர்ஜி என்றார்,
கிராமநேச சாயலில் காரியத்தை சாதித்துள்ளார் மதன்குமார் என்றார்.
கைலாசம் ஐயா கிராமம் மேம்படுத்தும் திட்டம் தயாரித்து அனுப்பினால் அவர் மேற்பார்வையிலேயே செய்யலாம். பண உதவி முழுவதும் எங்கள் பொறுப்பு என்றார் கோவிந்தன்.
எல்லோரும் சம்மதித்தார்கள்.
இந்த பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளியாக மதன்குமார் ஏற்பாடு செய்த அறுசுவை உணவின் வாசம் எல்லோரையும் சுண்டிஇழுத்தது.
ஒன்றாக உண்ணத் தயாரான அந்த கிராம மக்கள் நேசத்தோடு சேர்ந்து உழைக்கத் தயாரானானார்கள்.