சென்னை, ஜன. 11:
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முழுவதும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பணிபுரிவதாகவும்; அலுவலகப் பணி, களப் பணி, தேர்தல் பணி என அனைத்துப் பணிகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருவதாகவும்; வருவாய்த் துறையில் பணிபுரியும் இரவுக் காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைவரும் காலமுறை ஊதியம் பெற்று வருவதாகவும்;
கிராம உதவியாளர்கள் மட்டும் சிறப்பு காலமுறை ஓய்வூதியத்தில் பணியாற்றி வருவதாகவும்; இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சலுகைகள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும்; அரசுத் துறையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயிப்பது ஒருதலைபட்சமானது என்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களின் ஆணிவேராக திகழும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது.
கிராம உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஏழையெளிய மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் அவர்களது பணி இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும்.
கிராம உதவியாளர்களின் பணி நிலைமையையும், அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
![]()





