செய்திகள்

கிராமப்புறங்களில் 20,204 கோவில்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன: அறநிலையத் துறை தகவல்

சென்னை, ஜூலை 31–

கிராமப்புறங்களில் உள்ள பெரிய கோயில்களை தவிர, ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள 20 ஆயிரத்து 204 கோவில்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோவில் திறக்கப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆர்.வெங்கடேஷ், கிராமப்புறங்களில் உள்ள பெரிய கோவில்களை தவிர, ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள 20 ஆயிரத்து 204 கோவில்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் உள்ள 21,131 கோவில்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மூடப்பட்டுள்ள கோவில்களின் பணியாளர்களுக்கு, ஏற்கெனவே வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் இல்லாமல், கூடுதலாக 2 மாதங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *