செய்திகள்

கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன், மனைவி பரிதாப பலி

நாமக்கல், நவ. 16–

கிணற்றில் மனைவிக்கு நீச்சல் பழக்கிவிட சென்றபோது, கணவன், மனைவி இருவரும் நீரில் மூழ்கி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையம் அண்ணா நகர், சங்கங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் (வயது 35) இவரது மனைவி மகேஸ்வரி (வயது 25). இவர்கள், நேற்று பிற்பகலில் வீட்டுக்கு அருகே உள்ள விவசாயக் கிணற்றில் மனைவிக்கு நீச்சல் பழக்கிவிட சென்ற போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முன்னதாக நீச்சல் பழக செல்கிறோம் என வீட்டில் மகனிடம் கூறிவிட்டு சென்றவர்கள், நீண்ட நேரம் ஆகியும் வராததால் கிணற்றில் சென்று தேடிய போது, மகேஸ்வரியின் உடல் மிதந்த நிலையில் இருந்தது. பின்னர் இதுகுறித்து, தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கணவன், மனைவி உடல்கள் மீட்பு

இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில், விரைந்து வந்த போலீசார், கிணற்றில் இறங்கி மிதந்து கொண்டிருந்த மகேஸ்வரியின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கணவனின் உடலை தேட முயன்ற போது கிணற்றில் 30 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் தேட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மின் மோட்டார்கள் வைத்து சுமார் 4 மணி நேரம் கிணற்று நீர் முழுவதையும் இரைத்தனர். பின்பு, கிணற்றின் அடிப்பகுதியில் இருந்த சேற்றில் சிக்கி, இறந்து போன கணவன் சோமசுந்தரத்தின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இறந்து போன மகேஸ்வரிக்கு, சோமசுந்தரம் 2-வது கணவர் என்றும் முதல் கணவரை பிரிந்து 8 வயது ஆண் குழந்தை மற்றும் ஜீவிதா என்ற 4 வயது பெண் குழந்தையுடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சோமசுந்தரத்தை திருமணம் செய்து, இதே பகுதியில் வசித்து வந்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *