செய்திகள்

கிணற்றில் தூர் வாரியபோது விஷ வாயு தாக்கி 4 பேர் பலி

திருப்பதி, செப்.17–

கிணற்றில் தூர் வாரியபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வண்டுமில்லி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது வீட்டில் உள்ள உறை கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதையடுத்து நேற்று காலை பி.என். காலனியை சேர்ந்த லஷ்மன் (வயது 35), வம்பா (60), சீனிவாச ராவ் (53) என 3 தொழிலாளர்களை தூர்வாரும் பணிக்காக அழைத்து வந்தார்.

முதலில் லட்சுமணன் என்ற கூலி தொழிலாளி தனது உடலில் கயிறைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார். நீண்ட நேரம் ஆகியும் லட்சுமணன் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை அவரது சத்தமும் கேட்கவில்லை. இதையடுத்து வம்பாவும், பிறகு சீனிவாச ராவ் என 2 தொழிலாளர்களும் கிணற்றில் இறங்கினர்.

கிணற்றுக்குள் இறங்கிய 3 தொழிலாளர்களும் வெளியே வராததால் நாகேஸ்வரராவின் மகன் ராமராவ் கிணற்றில் இறங்கினர். அவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த நாகேஸ்வர ராவ் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்த போது கிணற்றில் விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கிணற்றில் இறங்கி இறந்த 4 பேர் உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.