புதுடெல்லி, பிப். 10–
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கும்பமேளாவில் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இந்த ஆன்மிக நிகழ்வில் பல நடிகர், நடிகைகளும் புனித நீராடி வருகின்றனர். அந்தவகையில், நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தாயுடன் புனித நீராடினார். மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கு மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரயாக்ராஜுக்கு வந்த ஜனாதிபதியை மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்னர் படகில் பயணித்த திரவுபதி முர்மு, பிரயாக்ராஜுக்கு வந்துள்ள புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உணவளித்தார்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பூக்களை தூவி ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.
தனது இந்த பயணத்தின்போது அக்ஷயவத் மற்றும் ஹனுமான் கோயில்களில் பூஜையும் சாமி தரிசனமும் செய்ய உள்ளார். மேலும் டிஜிட்டல் கும்ப அனுபவ மையத்தையும் அவர் பார்வையிடுவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.