செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பணியாற்றுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

Makkal Kural Official

நியூயார்க், மே 11–

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுக்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இருதரப்பும் நாளை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை செய்ததாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் அறிவித்தார். அதன் பிறகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாட்டு எல்லை பகுதிகளிலும் அமைதி திரும்பி வருகிறது. இரவில் சில அத்துமீறல்கள் இருந்தாலும் பெரிதாக சண்டை நடக்கவில்லை. இதனால் 3 நாள் சண்டை முடிவுக்கு வந்தது.

வர்த்தகத்தை அதிகரிப்பேன்

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமைத்துவத்தை எண்ணி பெருமைப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் தற்போதைய சண்டையை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை புரிந்துகொண்டுள்ளனர் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். சண்டையில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம். ஆனால் அவர்களின் துணிச்சலான செயலால் அது தடுக்கப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் தனது பதிவில் கூறினார். அதேநேரம், இந்த வரலாற்று முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் நான் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட இருநாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை சிறப்பாகச் செயல்பட கடவுள் ஆசீர்வதிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *