போஸ்டர் செய்தி

காஷ்மீருக்குள் புகுந்த தற்கொலை படை பயங்கரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கையால் உச்சகட்ட பாதுகாப்பு

ஸ்ரீநகர்,ஆக.12–

காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் -இ -முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு இயக்கங்களையும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வருகிறது. இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல்களை நடத்துகிறது.

குறிப்பாக காஷ்மீரில் அவர்களுடைய தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் அங்கு கலவரம் வெடிக்கக்கூடும் என கருதி ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரிய அளவில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளிடம் புகார் கூறியது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பல நாடுகள் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

இது பாகிஸ்தானுக்கு மூக்கு உடைபட்டதுபோன்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏதாவது செய்து உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. இதற்கு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் தான் சரியாக இருக்கும் என கருதிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விட்டுள்ளது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ -முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி இருக்கிறார்கள்.

மசூத் அசாரின் தம்பி அப்துல்ரவுப் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பவல்பூரில் தங்கி இருந்து பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு ஊடுருவ செய்து வருகிறான். அவனை ஐ.எஸ்.ஐ. உளவு படையினர் ராவல்பிண்டிக்கு அழைத்திருந்தனர். அங்கு வைத்து இந்த சதி திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து பவல்பூருக்கு திரும்பிய அப்துல்ரவுப் தற்கொலை பயங்கரவாதிகளை தயார்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ செய்துள்ளான்.

மொத்தம் 7 தற்கொலை பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பானிகால் அல்லது பிர்பண்டல் மலைப்பகுதி வழியாக ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜுரி அல்லது பூரி மாவட்டம் வழியாக உள்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது.

பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் ஆனந்த்நாக் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகளும் நடந்து வருகின்றன.

பக்ரீத் பண்டிகையான இன்றே அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்ப்பதால் பல இடங்களிலும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்கள் தாக்குதல் நடத்தாதபட்சத்தில் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்தலாம் என கருதப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருவேளை காஷ்மீரை தாண்டி இந்தியாவின் மற்ற பகுதிகளில் நுழைவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே காஷ்மீரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *